துடியலூரில் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளைக்கு 2023-2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். தலைவராக நாககுமார், துணைத்தலைவராக விஷ்ணு ஆதித்தன், செயலாளராக ராகுல் சந்திரசேகரன், பொருளாளராக சர்வஜித் கிருஷ்ணன் தேர்வாகியுள்ளனர்.


கோவை: கோவை துடியலூரில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் கோவை கிளை செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்டு தோறும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொள்வர். அதேபோல் 2023-2024ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



கோவை எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரியின் தலைவர் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.



விழாவில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் முன்னாள் அகில இந்திய தலைவர் இராமசாமி, ஐசிஏஐயின் தென்மண்டல அலுவலகத்தின் முன்னாள் தலைவர் ஜலபதி, ஐசிஏஐயின் நிர்வாகக்குழு உறுப்பினர் இராஜேஷ், மருத்துவர் சுமன் மற்றும் மூத்த பட்டயக் கணக்காளர்கள், கோவை கிளையின் முன்னாள் தலைவர்கள் பங்கேற்று புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.

இதில் தலைவராக நாககுமார், துணைத்தலைவராக விஷ்ணு ஆதித்தன், செயலாளராக ராகுல் சந்திரசேகரன், பொருளாளராக சர்வஜித் கிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் அமைப்பின் தலைவராக சதீஷ் உள்ளிட்டோர் பதவியேற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் சீனிவாசன், பட்டயக் கணக்காளர்களின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் அனைத்து தொழில்களுக்கும் அவசியம். வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு பட்டயக் கணக்காளர்கள் மிகப்பெரிய அளவில் துணைபுரிந்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஐசிஏஐ-ன் முன்னாள் தலைவர் இராமசாமி, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் தொடர்ந்து தனது கல்வி முறையில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிப்பதில், பட்டயக் கணக்காளர்களிடத்தில் பயிற்சி பெறும் முறைகளில் காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும், புதிய முறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.



இந்திய பட்டயக் கணக்காளர்கள் சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் வகித்துவருவதும் பல்வேறு ஆலோசனைக்குழுக்களில் பொறுப்பேற்றிருப்பதும் நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.



இதையடுத்து, கடந்து ஆண்டு நிறுவன வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்பட்ட பட்டையக் கணக்காளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



அதேபோல் மாணவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கோவை கிளையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.



தொடர்ந்து புதிதாக பதவி ஏற்ற உறுப்பினர்களிடம் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்புக்களை ஒப்படைத்தனர்.



இந்த நிகழ்ச்சியில், பட்டயக் கணக்காளர்களும், சிஏ மாணவர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...