தமிழ்நாடு முழுவதும் ஜவுளி பூங்கா அமைக்க அரசு முயற்சி - கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற நெசவாளர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நூல் விலையை குறைக்க நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாநிலம் முழுவதும் ஜவுளி பூங்கா அமைக்க அரசு முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.



கோவை: தமிழ்நாடு முழுவதும் ஜவுளி பூங்காக்களை அமைக்க அரசு முயன்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது, விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 750 யூனிட் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டதற்கும், ஆயிரம் யூனிட் இலவச மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்டுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் 70 பைசாவை குறைத்ததற்கும், 74,559 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சங்கத்தினர் ஒரு சில கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.



இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, இந்நிகழ்ச்சிக்கு தேதியை ஒதுக்கி தருமாறு என்னிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டபோது, இதில் நன்றி தெரிவிக்க என்ன உள்ளது நான் என் கடமையை தான் செய்துள்ளேன் கலைஞர் வழியில் செய்துள்ளேன் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூறினேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள் முதல் நெசவாளர்கள் மற்றும் நெசவு தொழிலாளர் துயர் துடைக்க எப்போதும் தயாராக இருக்க கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். திராவிட முன்னேற்ற கழகம் 1949-ல் துவங்கப்படும் போது விசைத்தறி உரிமையாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களது துயர் துடைப்பதற்காக 1953ஆம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி கைத்தறி ஆதரவு நாள் என கொண்டாடியது திராவிட முன்னேற்றக் கழகம். நெசவாளர்கள் துயர் துடைப்பதற்காக அவர்களது துணியை பெற்றுக் கொண்டு தோலில் சுமந்து தெருத்தெருவாக சென்று விற்றுக் கொடுத்தது தான் திமுக.

அண்ணா திருச்சியிலும், கலைஞர் சென்னையிலும் கைத்தறி துணிகளை விற்றனர். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது கழகத்தினர் அனைவரும் கைத்தறி துணைகளை தான் அணிய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நெசவாளர்களுக்கு அளிக்கப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வரும் திட்டங்களையும் பட்டியலிட்டார். கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு தொழில்கள் நசிந்து போயின. அதற்கு நெசவுத் தொழிலும் விதிவிலக்கல்ல.

அதனை தொடர்ந்து நூல் விலை உயர்வு இந்த இரண்டு தாக்குதலிலும் நெசவாளர்கள் சிக்கி இருந்த நேரத்தில் தான் கழக அரசு ஆட்சிக்கு வந்தது. பல்வேறு திட்டங்களை தீட்டி கொடுத்து மறுமலர்ச்சி ஏற்படுத்தி உள்ளோம். துணி நூல் துறைக்காக தனியாக ஆணையரகம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டு காலமாக செயல்படாமல் இருந்த காஞ்சிபுரம் பெருநகர அண்ணா கைத்தறி பட்டு பூங்கா புத்துயிர் பெற்றுள்ளது. நெசவாளர் குறை தீர்ப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, கரூர் விருதுநகர் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 10,000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெசவுக்கூடம், பொது வசதி மையம் சாயச்சாலைகள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

406 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அகவிலைப்படியில் 10% உயர்த்தி தரப்பட்டுள்ளது. சிறந்த நெசவாளர் விருது, ஏற்றுமதியாளர் விருது, சிறந்த வடிவமைப்பாளர் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 60 கோடி செலவில் தறி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றரை லட்சம் இலவச மின்இணைப்புகளை வழங்கியதன் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய மதிப்பு விவசாய தொழிலாளர்களிடையே கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆண்டது அந்த 10 ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டது. ஆனால் நாம் 20 மாதங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கி உள்ளோம்.

"சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்" இது கலைஞருடைய முழக்கம் ". சொல்லாததையும் செய்வோம் சொல்லாமலும் செய்வோம் இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முழக்கம்.

நூல் விலையை குறைப்பதற்கு நிச்சயமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும்

முறையாக பரிசீலிக்கப்பட்டு அவை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்.

அதே போல் நீங்கள் வைக்காத கோரிக்கையான மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஜவுளி பூங்காக்களை உருவாக்கிட இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா ஒன்று அமையப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, காந்தி, சாமிநாதன், முத்துச்சாமி, கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தன்மேந்திர பிரதாப் யாதவ்,

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் E.R.ஈஸ்வரன் உட்பட விசைத்தறி கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர்கள், விசைத்தறி கைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு சங்கங்களின் சார்பில் முதலமைச்சருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் 10 பயனாளர்களுக்கு விசைத்தறி மின்னணு பலகைக்கான ஆணையை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...