முதுமலை காப்பகத்தில் குட்டியானைகளை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட பெள்ளியம்மாள்!

ஆஸ்கர் விருது பெற்ற பின் தான் வளர்த்த யானைகளிடம் சென்ற பெள்ளியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ந்தார். வனத்துறை அதிகாரிகளும் குட்டி யானைகளுக்கு கரும்பு போன்ற உணவுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.



நீலகிரி: ஆஸ்கர் விருது பெற்ற பின் தான் வளர்த்த யானைகளிடம் சென்ற பெள்ளியம்மாள் ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ந்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆசியாவிலேயே பழமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வனப் பகுதிகளில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள், ஆட்கொல்லி யானைகள், முகாமிற்குப் பிடித்துக் கொண்டு வரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கி யானைகளாக மாற்றப்பட்டு வருகிறது.

தற்போது 28 வளர்ப்பு யானைகள் இந்த முகாமில் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கம் போலத் தாயைப் பிரிந்து தவித்த 2 யானை குட்டிகள் அங்குக் கொண்டு வரப்பட்டன. குறிப்பாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயைப் பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயைப் பிரிந்த தவித்த 5 மாத குட்டி யானையான அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானை குட்டியும் முதுமலை வளர்ப்பு முகாமுக்குக் கொண்டு வரப்பட்டன.



இந்த 2 யானைகளையும் பராமரிக்கும் பொறுப்பு அனுபவம் வாய்ந்த யானை பாகன் பொம்மனுக்கும், அவரது மனைவி பெள்ளிக்கும் கொடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் அந்த யானையை தங்கள் குழந்தையைப் போல நினைத்து வளர்த்து வந்தனர்.



இதனிடையே அந்த யானை வளர்ப்பு தம்பதி மற்றும் குட்டி யானைகள் குறித்து 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் ஆவண குறும்படம் தயாரிக்கப்பட்டது. உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் தயாரித்தார். தாயை பிரிந்த குட்டி யானைகளுக்கும், அந்த யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியரின் வாழ்க்கை கதையுடன் தயாரிக்கப்பட்ட அந்த ஆவண குறும்படத்திற்கு தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது இறுதி பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில், சர்வதேச ஆவண குறும்பட பிரிவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருதை வென்றது. இதன் மூலம் படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விட்டனர். இந்த படம் மூலம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு பழங்குடியின கிராமம் சர்வதேச அளவில் புகழ் பெற்று விட்டதால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் ஏராளமானோர் பொம்மன் வீட்டு முன்பு குவிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அந்த 2 குட்டி யானைகள் முகாமிற்கு வரவழைக்கப்பட்டபோது அங்கு வந்த பெள்ளியம்மா குட்டி யானையைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...