எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்..! - டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

மதுரை விமான நிலையத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுப்பிய அவதூறு கோஷம் கண்டனத்திற்குரியது. எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான சகோதரர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை மாவட்டம் சென்ற பொழுது, மதுரை விமான நிலையத்தில் அவருக்கு எதிராக எழுப்பிய அவதூறு கோஷமும், எடப்பாடி அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கும் கண்டனத்திற்குரியது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தலைவரோ, சாதாரண பிரஜையோ எவராயினும் விமானத்தில் பயணிக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தது முதல் வெளியே வருகின்ற வரையிலும் அவர்களது பாதுகாப்பைவிமான நிலையமும், விமான நிர்வாகமுமே ஏற்றுக் கொள்கிறது. ஏனெனில், ஒவ்வொரு பயணியும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உடைமைகளை தவிர, அவர்கள் நிராயுதபாணிகளே.!

அண்மை காலமாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள அரசியல் தலைவர்கள் விமானத்தில் பயணிக்கின்ற பொழுது விமான நிலையத்தையும், விமானத்தையும் அரசியல் தளமாக மாற்றுகின்ற தவறான போக்குகள் இளைஞர்களிடத்திலே உருவாகி வருகின்றது. குறிப்பாக வெளிநாடு சென்று வரக்கூடிய இளைஞர்கள் மேலை நாடுகளில் வெறுத்து ஒதுக்கப்பட்ட தவறான நடைமுறைகள் பலவற்றை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கிறார்கள்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரை பயணித்து சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டம் செல்வது அவருடைய திட்டமாக இருந்திருக்கிறது. தன்னிச்சையாகவோ அல்லது சிலரதுதூண்டுதல்களுக்கு ஆளாகியோ அரசியல் மாறுபட்ட கருத்து இருந்தாலும் ஒரு முன்னாள் முதல்வர், மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர், ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற தகுதியில் இருக்கக்கூடிய அவருக்கு எதிராக ஒரு நபர் எழுப்பிய முழக்கங்கள் எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. அது அனைவராலும் கண்டிக்கத்தக்கதும், சட்டப்படி தண்டிக்கப்படக் கூடியதும் ஆகும்.

ஒரு இளைஞன் எடப்பாடி அவர்களிடத்தில் நெருக்கமாக சென்று, அவரைவீடியோ பதிவு செய்து கொண்டே அவருக்கு எதிராக கோஷம் எழுப்புகின்றபோதும் அவர் ஒரு சிறிய எதிர் பிரதிபலிப்பைக்கூடக் காட்டவில்லை. அந்த இளைஞன் விமான நிலைய பேருந்திலிருந்து இறங்கி தனது உடைமைகளை எடுக்கச்சென்ற பொழுதும்கூட எடப்பாடி பழனிச்சாமி, அந்த இளைஞரிடம் எவ்வித வெறுப்பையும் காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. பொதுவாக இது போன்று தலைவர்களிடத்தில் அத்துமீறுகின்ற பொழுது அதைக் கேள்விப்படுகின்ற அந்த கட்சியின் தொண்டர்கள் தங்களது தலைவரிடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், சில நேரங்களில் அது கை கலப்பாக முடிவதும் உண்டு.



எடப்பாடி அவர்களிடம் இது போன்று ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார் என தெரிய வந்ததுமே காவல்துறையினரும், விமான நிலைய அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு அந்த குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அந்த நபருடைய அலைபேசியைக் கைப்பற்றி மேல்விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புகார் அளிக்காமலேயே அந்த இளைஞர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் நடைபெறவில்லை.

இதற்கு மாறாக, பாதிப்புக்கு ஆளான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது முறையும் அல்ல, ஜனநாயக நடைமுறையும் ஆகாது. தனிப்பட்ட முறையில் அதுவும் ஒரு கட்சியின் தலைவர் யாருடைய துணையும் இல்லாத நேரத்தில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதலுக்குச் சமமானதாகவே கருதப்பட வேண்டும். கத்தியும் வாளும் துப்பாக்கியும் வெடிகுண்டுகளும் மட்டும் தான் ’ஆயுதம்’ என்று கருதக்கூடாது. நாக்கும், ஆயுதம் தான்; பேச்சும் ஆயுதம் தான்; இன்றைய சமூக வலைதளங்களும் ஆயுதமே.!

எதார்த்தத்தில் அவரிடத்தில் நெருங்கி வந்து காணொளி எடுத்தது உள்ளிட்ட செயல்களை ’கொலை முயற்சி’ செயலாகவே கருதி அது போன்ற வழக்குகளே அந்த இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதுபோன்ற தவறிழைத்த அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உட்பட அவரது கட்சியினர் பலர் மீது ஆறு பிரிவுகளின் கீழும், குறிப்பாக கைப்பேசியை அபகரித்துக் கொண்டார் என கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...