விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு உடுமலை மாணவர்கள் அறிவியல் களப்பயணம்!

உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அறிவியல் திறனறி போட்டிகளில் பங்கேற்ற உடுமலையை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு களப்பயணம் சென்றுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


உடுமலை: திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு உடுமலையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அறிவியல் களப்பயணம் சென்றுள்ளனர்.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியும், அறிவியல் திறனறிப் போட்டிகளும் நடைபெற்றது.



கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த அறிவியல் திறனறி போட்டிகளில், கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் என சுமார் 150 மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதல் தளமான, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அறிவியல் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.



இந்நிலையில், களப்பயணத்திற்கு புறப்பட்ட மாணவர்களை உடுமலை தமிழிசைச் சங்க துணை தலைவர் தமிழாசிரியர் வஞ்சிமுத்து வாழ்த்துக்களை கூறி வழியனுப்பி வைத்தார். இந்த களப்பயணத்தில், உடுமலை இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த மார்ச் 15ஆம் தேதி புறப்பட்டு சென்ற மாணவர்கள் தும்பா ராக்கெட் ஏவுதல் நிலையம் மற்றும், பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும், மாணவர்களின் பல்வேறு வினாக்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். அங்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வரலாறு குறும்படமாக மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. தொடர்ந்து கேரள மாநிலத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள 3d கோளரங்கத்தில் மாணவர்கள் சூரிய குடும்பத்தின் வரலாறு பற்றிய குறும்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், முதல்முறையாக ரயில் பயணம் செய்வது, முதல் முறையாக கோளரங்கம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு வருவதால் எங்களுக்கு ஒவ்வொன்றும் மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் அமைந்திருந்தது. நமது இந்திய விஞ்ஞானிகள் எவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறார்கள் என தெரிந்து கொண்டோம். விஞ்ஞானிகளாக மாறுவதற்கு இது போன்ற களப்பயணங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றனர்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் முதுநிலை விஞ்ஞானிகளான ராஜசேகர் மற்றும் சசிகுமார் ஆகியோர் நேரடியாக வந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து, உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி பேசுகையில், அறிவியல் களப்பயணத்தில் கிராமப்புற மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். முதல்முறையாக இது போன்ற இடங்களுக்கு செல்வதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், என்றார்.



இந்த நிகழ்வில் உடுமலை சுற்றுச்சூழல் சங்க செயலர் நாகராஜன், நிர்வாகி சசிகுமார் கலிலியோ அறிவியல் கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், ஹரிணி, மதுஸ்ரீ, ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...