பல்லடம் அருகே பி.ஏ.பி வாய்க்காலை சேதப்படுத்திய குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

பல்லடம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் சேதப்படுத்தப்பட்ட பி.ஏ.பி வாய்க்காலை பொதுப்பணித்துறையால் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வாய்க்காலை சேதப்படுத்தியதால், குவாரி உரிமையாளர் பிரகாஷ் மீது மங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலை சேதப்படுத்திய குவாரி உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



பல்லடம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரி உரிமையாளர் பிரகாஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆசியாவின் பொறியியல் அதிசயம் என போற்றப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கிளை வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சுமார் 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களுக்கு முக்கிய ஜீவாதாரமாக விளங்கிய இந்த கிளை வாய்க்காலை சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை, அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதப்படுத்தப்பட்ட வாய்க்காலை மீண்டும் சீரமைத்து கொடுத்தனர்.



இந்நிலையில் மீண்டும் குவாரி உரிமையாளர் பிரகாஷ் பிஏபி கிளை வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி பணிகளை மேற்கொண்டதால், 140 மீட்டர் தூரத்திற்கு கிளை வாய்க்கால் முழுவதுமாக காணாமல் போனது.

இதுதொடர்பாக விவசாயிகள் மீண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடவே, நேற்று முன்தினம் சேதமடைந்த வாய்க்காலை பல்லடம் காவல்துறை மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஷியாமளா அளித்த புகாரின் பேரில் மங்கலம் காவல் நிலையத்தில் குவாரி உரிமையாளர் பிரகாஷ் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கக்கூடிய பிஏபி வாய்க்கால் முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதால் 138 ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது.

அதேபோன்று கனிம வள சட்ட விதிகளின்படி நீர் நிலைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் பிரகாஷ் கல்குவாரிக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வாய்க்காலை சேதப்படுத்தி குவாரி தொழில் செய்யும் பிரகாஷ் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காணாமல் போன வாய்க்காலை மீண்டும் சீரமைத்து தர வேண்டும் எனவும் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...