கோவையில் இறந்தது இலங்கையின் பிரபல தாதாவா? - 3 ஆண்டுகளுக்கு பின் சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்த உண்மை!

கோவை சேரன்மாநகரில் கடந்த 2020ஆம் ஆண்டு பிரதிப் சிங் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது பின்னணி குறித்த விசாரணையில் இறந்தவர், இலங்கையை சேர்ந்த பிரபல தாதாவான அங்கொட லோக்கா என்பதும், அவர் இலங்கையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த நபர் இலங்கையின் பிரபல தாதா என்பது 3 ஆண்டுகளுக்கு பின் சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள சேரன்மாநகர் பகுதியில் கடந்த 2020 ஜீலை 3 ஆம் தேதி பிரதிப் சிங் என்பவர் இறந்தார். இவரது உடல், அவருடன் தங்கியிருந்த அம்மானி தாஞ்சி என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலை பெற்றுக்கொண்ட அம்மானி தாஞ்சி, தனது நண்பர்களான வழக்கறிஞர் சிவகாமி தேவி மற்றும் தியானேஷ்வரன் உதவியுடன் மதுரைக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், இறந்த நபர் குறித்து தமிழ்நாடு போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இறந்தவரின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து, வழக்கானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை தீவிரப்படுத்தினர்.



சி.பி.சி.ஐ.டி விசாரணையில், இறந்தவர் இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கொட லொக்கா என்பது தெரியவந்தது.



இதனைதொடர்ந்து, அங்கொட லொக்காவுடன் தங்கியிருந்த அம்மானி தாஞ்சி, வழக்கறிஞர் சிவகாமி தேவி, தியானேஷ்வரன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் தொடர் விசாரணையில், இலங்கையில் 8 கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் குற்றங்களில் அங்கொட லொக்கா ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இலங்கை போலிஸாரால் தேடப்பட்டு வந்த அங்கொட லொக்கா அங்கிருந்து தப்பி, 2017ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து, 2020 பிப்ரவரி மாதம் கோவையில் தஞ்சம் புகுந்திருக்கின்றார். மேலும், முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, பிரதிப் சிங் என்ற பெயரில் ஆள் மாறாட்டம் செய்து கோவையில் வசித்து வந்தது சி பி சி ஐ டி விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் மாரடைப்பால் அங்கொட லொக்கா உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் நடந்த போலீசாரின் விசாரணையில், இறப்பு தொடர்பான விடயங்களை கொண்டு ஆராய்ந்தபோது, தாதா அங்கொட லொக்கா இறப்பு இயற்கையானது என்று மருத்துவ அறிக்கை தெரிவித்தன. இந்த நிலையில் கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா? என்பதை உறுதிபடுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டனர்.

இதற்காக அவரது பெற்றோரிடமிருந்து ரத்த மாதிரிகள் மற்றும் இலங்கை போலீசாரிடமுள்ள அங்கொட லொக்காவின் கைரேகை ஆகியவற்றை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சி.பி.சி.ஐ.டி. போலீசார், ரத்தமாதிரிகள், கைரேகையை இலங்கை அரசிடமிருந்து பெற்றுத்தரக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினர்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகியது. கொரோனா நீங்கிய நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கடிதத்தை மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு அனுப்பி நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியது.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கடிதத்தை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம், இலங்கை அரசுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை தொடங்கின. இந்த நிலையில் அங்கொடொ லொக்காவின் டி,என்.ஏ உடன் பெற்றோரின் டி.என்.ஏ ஒத்துப்போவது தெரியவந்தது.

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலிஸார் விசாரணை, அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கோயமுத்தூர் நீதிமன்றத்தில் சமர்பிக்க திட்டமிட்டிருக்கின்றனர். அதனடிப்படையில் இறந்தவர் இலங்கை தாதா அங்கொட லொக்கா என்றும், மரணம் இயற்கையானது எனவும் தனிப்படை போலீசாரின் விசாரணையின் மூலம் 3 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...