மடத்துக்குளம் அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!

மடத்துக்குளம் அருகே ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மெட்ராத்தி ஊராட்சி மன்ற கட்டடத்தை திறந்து வைத்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.24.23 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே புதிய கிராம ஊராட்சி மன்ற கட்டடத்தினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.



மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், மெட்ராத்தி ஊராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம ஊராட்சி மன்ற கட்டடத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



இதனையடுத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.24.23 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.



தொடர்ந்து இந்த நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழு கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

இன்றைய தினம் மெட்ராத்தி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 25 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக உழைத்த ஊராட்சி ஒன்றிய குழுவுக்கும் ஊராட்சி மன்றத்திற்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும் என்னை வெற்றி பெறச் செய்த காங்கேயம் தொகுதி வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



கடந்த காலங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் 2021 மே திங்கள் 7ஆம் நாள் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிலிருந்து பல்வேறு திட்டங்களை மக்கள் நலனுக்காக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் குறிப்பாக கூட்டுறவு வங்கியில் ஐந்து பவுன் வரை பெற்றிருந்த நகை கடன் தள்ளுபடி என்று அறிவித்தார். அதில் நமது திருப்பூர் மாவட்டத்தில் இதே மெட்டாரத்தியில் வந்து தான் அந்தத் திட்டத்தை துவக்கி வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 5 நபர்களுக்கு நலிவுற்றோர் மேம்பாட்டு நிதியின் 0.73 லட்சம் மதிப்பீட்டிலும், 13 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சமுதாய முதலீட்டு நிதயின் கீழ் 11.50 லட்சம் மதிப்பீட்டிலும், 1 மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.12.00 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 24.23 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசெந்தில், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் ஓன்றிய குழு தலைவர் காவியா ஐயப்பன், மெட்ராத்தி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...