கோவை விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு பணி தீவிரம்

கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஓடுபாதை புனரமைப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் தெரிவித்துள்ளார்.



கோவை: பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு ஓடுபாதை பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமான ஓடுபாதை சேதமடையும். இதை கருத்தில் கொண்டு விமான நிலைய ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கோவையில் பகல் நேரங்களில் மட்டுமின்றி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலும் விமான போக்குவரத்து உள்ளது.

புனரமைப்பு பணிகள் இரவு நேரங்களில் மட்டும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டதால் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மழை, பனி உள்ளிட்ட காரணங்களால் பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது இப்பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன.

இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறுகையில், “ஓடுபாதை புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகவும் சவாலானது. குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் தொடங்கி பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகள் தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். இதனால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கும்” என்றார்.

இதைத்தொடர்ந்து, கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானம் அதிகாலை 4.15 மணிக்கு தரையிறங்கி, 5 மணியளவில் ஷார்ஜா புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமான சேவை தற்போது காலை 6 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓடுபாதை பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால் ஏப்ரல் முதல் மீண்டும் ஷார்ஜா விமானம் அதிகாலை 4.15 மணிக்கு தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...