வேளாண்துறை பட்ஜெட் 2023-24 தாக்கல் - அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று வேளாண்துறைக்கான பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு அமைக்கப்படும் உட்பட வேளாண்துறை வளர்ச்சிக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.



தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று நிதிஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2வது நாளான இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண்துறைக்கான தனி பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ₹5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.



60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும். பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS (One Stop Solution) இணையதளம் அறிமுகம் செய்யப்படும். வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்.

சூரியகாந்தி, எள், நிலக்கடலை, சோளப் பயிர் சாகுபடியைப் பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையக்கூடிய மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், அரியலுர், வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.

தென்னை வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வரும் ஆண்டில் ஒருங்கிணைந்த பண்ணை முறைகள் குறித்த செயல்விளக்கத்திடல்கள், தென்னை மண்டல நாற்றுப்பண்ணைகள் அமைத்தல், மறுநடவு புத்தாக்கத்திட்டம் ஆகியவற்றிற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு, ரூ.3 கோடி மதிப்பீட்டில் சர்க்கலை ஆலைக் கழிவு மண்ணிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.

மதுரையில் ரூ. 7 கோடி செலவில் மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம் உருவாக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் ரூ.3 செலவில் பலா இயக்கம் அறிமுகப்படுத்தப்படும். இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை ஒருங்கிணைத்து ரூ.6 கோடி செலவில் மிளகாய் மண்டலம் உருவாக்கப்படும்.

ரூ.2.5 கோடி செலவில் கறிவேற்பிலைத் தொகுப்பு, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மையத்திற்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தக்காளி, வெங்காயம் சீராகக் கிடைக்கச் செய்யும் வகையில், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நவீன இயந்திர உதவிகள் வழங்க ரூ. 29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தக்காளி உற்பத்தியை அதிகரிக்க சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட திட்டங்களை திருப்பூர், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படுத்த ரூ. 19 கோடி நிதி ஒதுக்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்கும் வகையில், பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் ஆகிய முறைகளில் காய்கறிகள், பூக்கள் சாகுபடி செய்யும் வகையில் திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவர்களுக்கு அயல்நாட்டில் விவசாயம் தொடர்பான உயர் ரக தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கீழ்பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர்ப் பாசன கட்டமைப்புகளை சோதனை முறையில் ஏற்படுத்திட ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.தேனி மாவட்டத்தில் வாழ தொகுப்பு வளர்ச்சித் திட்டம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்மையின் மகத்துவத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு. வரும் நிதியாண்டில் 2504 கிராமங்களுக்கு ரூ.43 கோடி மானியத்தில் 5 ஆயிரம் பவர்டில்லர்கள் வழங்கப்படும்.

திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விவற்பனைக் கூடங்கள் மூலம் கண்வலிக்கிழக்கு விதைகள் வர்த்தகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டில் ரூ.530 கோடி நிதி ஒதுக்கீடு. மேலும் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர மூலதன வைப்பு நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும். வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவர். கூட்டுறவு பயிர்க்கடனாக வரும் ஆண்டில் 14ஆயிரம் கோடி வழங்கப்படும். அதேபோல், ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1500 கோடி வழங்கப்படும். 

வரும் ஆண்டில் நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.100-ம், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம் ஊக்கத் தொகையாக வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு. நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும். 

அனைத்து ஆட்சியர் அலுவலகத்திலும் மதி-பூமாலை வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறுதானிய சிற்றுண்டி உணவகம் உருவாக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...