இனிப்பும், கசப்பும் நிறைந்தது தமிழக வேளாண் பட்ஜெட்..! - கோவை விவசாய சங்கத்தினர் கருத்து

தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்பதாகவும், பால் கொள்முதல் விலையை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், மொத்தத்தில் இனிப்பும் கசப்பும் நிறைந்த பட்ஜெட் இது என்று கோவை விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: தமிழக வேளாண் பட்ஜெட்டானது இனிப்பும், கசப்பும் நிறைந்தது என கோவை விவசாய சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விவசாயிகள், விவசாய சங்கங்கள் என பலரும் வேளாண்மை பட்ஜெட்டை வரவேற்றும், எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது உள்ளிட்டவைகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கோவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது,

தமிழகத்தில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கிறோம். பருத்தி உற்பத்தியை பெருக்க ரூ.12 கோடி, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க தமிழக அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது மற்றும் ரூ.5 லட்சம் பணம் வழங்கல். வேளாண்மை பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள் 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு,

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் ஆப் குழு, இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம், போன்ற பல்வேறு அறிவிப்புகள் மிகவும் வரவேற்கதக்கது. அதே சமயம் பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், ஆனைமலை - நல்லாறு திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மேற்கு மண்டல விவசாயிகள் மிகவும் பயன்பெறுவார்கள், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஒன்றிய அரசிடம் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்றலாம். கேரளா அரபிக் கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுத்து இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். வனவிலங்குகள் பயிர்களை சேதம்படுத்துகின்றன. இதற்கான நிதி என்பது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன இழப்பீடு வழங்கப்பட்டதோ அதே நிலையில் தான் உள்ளது. இதனை உயர்த்தி அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

புண்ணாக்கு விலை, தவிடு விலை, போன்றவைகள் உயர்ந்த நிலையில் கால்நடை விவசாயிகள் படும் துயரம் அதிகம். பால் கொள்முதலுக்கான விலையை உயர்த்தி அறிவிக்க நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாளர்களை விவசாய வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்த அறிவிப்பு வராதது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்புற விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மொத்தத்தில் இந்த வேளாண் பட்ஜெட்டானது இனிப்பும், கசப்பும் நிறைந்த பட்ஜெட் ஆக உள்ளது.

இவ்வாறு விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...