மனு அளிக்க வந்த மக்களை காக்க வைத்த விவகாரம் - தாராபுரத்தில் பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை கண்டுகொள்ளாமல், உயர்அதிகாரிக்கு மதிய உணவு ஆர்டர் செய்த வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம், அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி. இவர் கடந்த 17-ந் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தார். அவரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது அவருக்கு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வந்தது. இதையடுத்து, தனலட்சுமி, தனியார் ஓட்டலில் உயர்அதிகாரிக்கு உணவு வாங்கி வரும்படி உணவு பட்டியலை உதவியாளரிடம் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் ஓட்டலுக்கு சென்ற உதவியாளரிடம் செல்போனில் உணவு வகைகள் குறித்து ஒன்றன்பின் ஒன்றாக கூறிக்கொண்டே இருந்துள்ளார்.



இதனால் மனுகொடுக்க வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால் அதிருப்தி அடைந்ததோடு, தனலட்சுமியின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், தாராபுரம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் வருவாய் கிராமத்துக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அலங்கியம் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணனை தாராபுரத்துக்கு நியமித்து உத்தரவிட்டார். மனு கொடுக்க வந்த பொதுமக்களை காக்க வைத்துவிட்டு, உயர் அதிகாரிக்கு உணவு ஆர்டர் செய்ததாக பெண் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...