காஞ்சிபுரம் பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் வழங்கி, வாரிசுகளுக்கும், காயம்பட்ட - உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் ரூ 5000 முதல் ரூ 10000 வரை மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருமித்தனம் காட்டக்கூடாது எனவும் கரிசனம் காட்ட வேண்டுமென கூறியுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் அல்ல 25 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 14 பேர் மிகுந்த ஆபத்தான நிலையிலும், பலர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய அனைவரையும் நவீன வசதிகள் கொண்ட உயர் மருத்துவ மையங்களுக்கு மாற்றி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதாலும், தயாரிக்கின்ற பொழுது பல ஏழை தொழிலாளர்களுக்கு இது போன்ற உயிர் மற்றும் உடல் சேதங்களை விளைவிக்கின்ற காரணத்தினாலும் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. எனினும், பட்டாசு தயாரிக்கும் இடங்களில் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

லஞ்ச லாவண்யங்களில் திளைத்துக் கிடக்கும் அதிகாரிகள் இதைக் கண்டும் காணாமலும் விட்டு விடுகிறார்கள். போதாக்குறைக்கு அந்தந்த பகுதி ஆளும் கட்சியின் பிரமுகர்கள் - அமைச்சர்களின் தலையீட்டின் காரணமாகவும் பட்டாசு தொழில்களை இன்னும் முறைப்படுத்த முடியாமல் இருக்கிறது.

சிவகாசியைச் சுற்றி மட்டுமே நடந்து வந்த பட்டாசு ஆலை விபத்துக்கள் இப்பொழுது காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி போன்ற வடக்கு மாவட்டங்களிலும் நிகழ ஆரம்பித்துவிட்டது. இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் மட்டுமே அமைச்சர்கள் அவ்விடங்களுக்கு சென்று, சட்டம், விதிமுறைகள் பற்றி பேசுகிறார்கள்.

மற்ற சாதாரண காலங்களில் அவர்கள் வாரத்திற்கு ஒரு மாவட்டத்திற்குச் சென்று இவற்றையெல்லாம் கண்காணித்தாலே இதுபோன்ற விபத்துக்களைப் பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தி விட முடியும்.

ஆனால், இது போன்ற தொழிற்சாலை உரிமையாளர்களிடம் சட்டவிரோதமாக வசூலில் ஈடுபட்டு கோடி கோடியாக குவிக்கக் கூடியவர்களால் எவ்வாறு இவற்றையெல்லாம் முறைப்படுத்த முடியும்? பெரும்பாலும் இது போன்ற பட்டாசு தொழிற்சாலை பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் ஏழ்மையின் விளிம்பில் சிக்கித் தவிக்கக் கூடியவர்களே.!

வேறு விபத்துக்கள் மற்றும் மரண எய்தியிருக்கக் கூடியவர்களுக்கு அரசின் நிதியிலிருந்து ரூ 25 லட்சம், 50 லட்சம் என வாரி வழங்குகிறார்கள். ஆனால், பட்டாசு தொழிலில் ஈடுபடக் கூடியவர்கள் மரணமெய்தினால் மட்டும் வெறும் 3 லட்சம் கொடுத்து பிரச்சனையை அத்தோடு முடித்துக் கொள்ள அரசு முயல்கிறது. அது என்ன மூன்று லட்சம் அளவீடு எனத் தெரியவில்லை?

ஒரு விபத்தில் கணவனோ அல்லது மனைவியோ இறந்து விட்டால் அந்த மூன்று லட்சத்தை வைப்பு நிதியில் வைத்தால் கூட மாதம் ரூ 1500 கூட வட்டி வராது. ஏழை, எளிய மக்களிடத்தில் இந்த அரசு கரிசனம் காட்டுவதற்கு பதிலாக கருமித்தனம் காட்டுவது ஏன்? எனத் தெரியவில்லை.

இன்றைய பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 50 லட்சம் கொடுப்பது தான் நியாயமாக இருக்க முடியும். எனினும் குறைந்த பட்சம் 25 லட்சம் ரூபாயாவது வழங்க வேண்டும். அதேபோல மத்திய அரசும் வெறும் ரூ 2 லட்சம் என்பதெல்லாம் முறையல்ல, மத்திய மத்திய அரசின் பங்காக 10 லட்சமாவது வழங்க வேண்டும்.

இந்த விபத்தே தமிழகத்தின் கடைசி விபத்தாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் ஒரு மாத காலத்திற்கு முழுமையாக ஆய்வு செய்து, இனி அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வட்டார அளவில் அது முழுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி பணியாளர்களை அனுமதிப்பது; அனுமதிக்கப்படாத வெடி மருந்துகளை பயன்படுத்துவது - பட்டாசுகளைத் தயாரிப்பது; வெடி மருந்துகளை முறையாக பாதுகாக்காதது உள்ளிட்ட அனைத்தையும் முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் பட்டாசு ஆலை விபத்துக்களைத் தடுக்க முடியும்.

எனவே, ஓரிக்கை கிராம பட்டாசு ஆலை விபத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ 3 லட்சத்தை ரூ 25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். காயம்பட்டோருக்கு உயர் சிகிச்சையும், உடல் உறுப்புகளை இழந்தோருக்குத் தகுந்த நிவாரணமும் வழங்க வேண்டும்.

அதேபோல இந்த நிவாரணத் தொகையுடன் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும், காயம்பட்ட - உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கும் வாழ்நாள்  முழுவதும் ரூ 5000 முதல் ரூ 10000 வரை  மாதாந்திர உதவித் தொகை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...