கோவை அருகே காதல் ஜோடிகளிடம் நூதனமாக செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது!

கோவை வாலாங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதிகளில் விடுமுறை நாட்களில் வரும் காதல் ஜோடிகளை குறிவைத்து நூதனமாக செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த மவுலிதரன்(19), சஞ்சய்(22), சதீஷ்குமார்(22), மகேந்திரன்(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வாலாங்குளம் அருகே காதல் ஜோடிகளை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைவரையும் கவரும் வகையில் படகு குழாம், வண்ண, வண்ண விளக்குகள், மக்கள் அமர பல்வேறு விதமான இருக்கைகள் என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பொழுது போக்கு இடமாகவே காட்சி அளிக்கிறது.

விடுமுறை தினங்களில் இந்த குளங்களுக்கு ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து செல்வார்கள். இது தவிர அனைத்து நாட்களிலும், பகல் மற்றும் மாலை வேளைகளில் காதல் ஜோடிகள், நண்பர்கள் என பலரும் அமர்ந்து குளத்தின் அழகினை ரசிப்பது வழக்கம்.

இந்த நிலையில் அப்படி பேசி கொண்டிருக்கும் காதல் ஜோடிகளை குறிவைத்து கடந்த சில மாதங்களாக செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களுக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதுவரை ஆர்.எஸ்.புரம், பெரியகடைவீதி போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவாகி உள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்ந்து வந்தது. இதையடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபடும் கும்பலை பிடிக்க உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில், ஆய்வாளர் லதா மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை, மாரிமுத்து, உமா, ஏட்டு கார்த்திக், பூபதி மற்றும் நாகராஜ், செந்தில் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். சம்பவத்தன்று தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றிதிரிந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் கோவை கவுண்டம் பாளையத்தை சேர்ந்த மவுலிதரன்(19), தெலுங்குபாளையத்தை சேர்ந்த சஞ்சய்(22), செல்வபுரம் சதீஷ்குமார்(22), சூலூர் மகேந்திரன்(22) என்பதும், காதல் ஜோடிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலாங்குளம், பெரியகுளம் பகுதியில் சுற்றி திரிந்து வரும் இவர்கள் 4 பேரும் மது குடிப்பதற்காக கையில் காசு இல்லாத நேரங்களில் செல்போனை திருடி விற்று குடித்துள்ளனர்.

இவர்கள் வாலாங்குளம், பெரியகுளம் குளக்கரையில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளிடம் சென்று, அவசரமாக வீட்டிற்கு பேச வேண்டும். என்னிடம் போன் இல்லை. உங்கள் போனை தந்தால் பேசி விட்டு தருகிறேன் என கூறி கேட்பார்கள்.

பின்னர் வாங்கி கொண்டு, அவர்களை விட்டு சிறிது தூரம் தள்ளி நின்று பேசுவார்கள்.

அவர்கள் தங்களை பார்க்காததை அறிந்ததும், செல்போனுடன் அந்த இடத்தை விட்டு தப்பி விடுவார்கள். பின்னர் அந்த செல்போனை எடுத்து கொண்டு டாஸ்மாக் கடைக்கு செல்வார்கள். அங்கு குடிக்க வரும் யாரிடமாவது, எங்கள் வீட்டில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை. அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

இந்த செல்போனை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என கேட்பர். இதனை நம்பி சிலர் செல்போனை வாங்கி கொண்டு பணத்தையும் கொடுத்து விடுவார்கள். அந்த பணத்தை பெற்றுக் கொள்ளும் அவர்கள், நேராக வேறு ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று, அங்கு மதுவாங்கி குடித்து, ஜாலியாக வாழ்க்கையை ஓட்டி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் எத்தனை செல்போன்களை பறித்துள்ளனர். இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...