வன்முறை சம்பவங்களுக்கு மூல காரணமே டாஸ்மாக் தான்..! - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மியை இதயபூர்வமாக தடை செய்யவில்லை. ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் இதனை நிறைவேற்றியுள்ளர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை என, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை: à®•ோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் மேற்குப் புறவழிச் சாலை திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அத்திட்டம் சுகுணாபுரம் வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுகுணாபுரம் வரை திட்டம் செயல்படுத்தப்பட்டால் அதனை தொடர்ந்து அவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் மதுக்கரை, மரப்பாலம் வழியாக செல்லக்கூடும். 

ஏற்கனவே அங்கு போக்குவரத்து நெரிசல் இருப்பதால் இத்திட்டம் சுகுணாபுரத்தில் நிறைவுற்றால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க கூடும். மலையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி வனவிலங்குகளோடு விவசாயிகளுக்கு மோதல்கள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு அரசு ஏதேனும் திட்டங்களை அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் அதுபோன்ற அறிவிப்புகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. 

மேலும் விவசாய விளைப்பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. பாலுக்கும் உகந்த விலை கிடைக்காத பட்சத்தில் அதனை கீழேகொட்டி போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு விலை நிர்ணயம் இல்லாததே காரணம். மாநில அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த குறைந்தபட்ச விலை விலை நிர்ணயம் அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். இளைஞர்கள் போதை மாத்திரைகள் போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். தற்போது ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாக இருக்கிறார்கள். 

முன்பெல்லாம் சீட்டாட்டங்கள் நடைபெற்று காவல்துறையினர் அதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம், விளையாடி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை பொறுத்தவரை அதிக ஆசையின் காரணமாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளிகள் ஆகி தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

கடந்த ஆண்டு ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அவசர சட்டமாக கொண்டுவரப்பட்ட நிலையில், ஆளுநர் பல மாதங்களாக கையெழுத்து இடாமல் இருந்தது, மீண்டும் நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதில், இடைப்பட்ட காலங்களில் எத்தனை பேர் மீது மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது? 

ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு மாநில அரசு பதில் அளிக்காமல், ஆளுநரை குறிவைத்தும் அவருக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மீண்டும் அதே சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கைத்தட்டுதல் வாங்கிக் கொண்டு ஆளுநருக்கு அனுப்புவதால் என்ன பலன் வந்து விடப் போகிறது? இடைப்பட்ட காலங்களில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

ஆன்லைன் ரம்மியை இதயபூர்வமாக தடை செய்யவில்லை. ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இதனை நிறைவேற்றியுள்ளர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை. 

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்றைய தினம் நீதிமன்றத்தில் நடந்த ஆசிட் வீசி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுபோன்ற நிகழ்வுகள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது எனவும் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் குற்றச்சம்பவங்கள் வன்முறை சம்பவங்களுக்கு மூல காரணமே டாஸ்மாக்(போதை) தான் எனவும் தெரிவித்த டாக்டர். கிருஷ்ணசாமி, டாஸ்மாக்கை நிறுத்தவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 

மேலும் கஞ்சா எங்கிருந்து வருகிறது என தமிழக காவல்துறைக்கு நன்றாக தெரியும் எனவும், தமிழக காவல்துறை நினைத்தால் அதனை தடுக்கவும் முடியும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார். கோவிட் காலத்தில் மிக சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என பெயர் மட்டும் மாற்றினால் ஒன்றும் நிகழ்ந்து விடாது என்று கூறிய அவர், அவர்களிடம் கூலி உயர்வு குறித்து பேரம் பேசுவது என்பது நியாயமல்ல எனவும், பணியாளர்களின் தின சம்பளமோ அல்லது மாதச் சம்பளமோ உயர்த்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...