உடுமலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.3க்கு விற்பனை - வேதனையில் விவசாயிகள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.3 முதல் ரூ.5க்கு விற்பனை செய்யப்படுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், மாற்றுத்தொழிலுக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.3க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு காய்கறிகள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.



குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விளையும் காய்கறிகள் விற்பனைக்காக உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



தக்காளி சாகுபடி என்பது பெரும்பாலான காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.



உற்பத்தி அதிகரிக்கும் காலங்களில் பெரும் விலை சரிவு ஏற்படுவதும், விலை உயர்வு ஏற்படும் காலங்களில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.



உடுமலை பகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சமீப காலங்களாக ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி மேற்கொள்வதும் விலை சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

விலை சரிவால் ஏற்பட்ட வேதனையின் உச்சத்தில் விவசாயிகள் தக்காளியை சாலை ஓரம் வீசுவதும், தக்காளி செடிகளுடன் டிராக்டர் விட்டு அழிப்பதும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது. அதேநிலை தற்போதும் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில்,

கடந்த சில வாரங்களாக தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலையே ஏற்பட்டு வருகிறது. உடுமலை சந்தையில் மொத்த விற்பனையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.40 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ. 3 முதல் ரூ. 5 வரை விற்பனையாகும் நிலையே உள்ளது.



இது பறிகூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குக்கூட கட்டுப்படி ஆகாத விலையாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு மாற்றுத் தொழில் தேட வேண்டிய நிலை ஏற்படும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...