மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - கோவை தொழில் நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் உற்பத்தி துறையின் கீழ் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்புசாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் என பல லட்சம் தொழிற்சாலைகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

இதன் மூலம், தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்தொற்று பரவலை தொடர்ந்து, அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு மற்றும் அதன்பின் நிலவிய சூழ்நிலை காரணமாக அனைத்து தொழில்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டன.

இந்த நிலையில், தற்போது, மீண்டும் நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று பரவல் வேகமெடுத்து வருவது தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கோவை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின்(கொசிமா) தலைவர், நல்லதம்பி கூறியதாவது,

2 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தொழில் நிறுவனங்கள் மீண்டு வர தொடங்கியுள்ளன. தற்போது மீண்டும் நோய்தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

தினமும் தொழிலாளர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. முகக்கவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்களின் சங்க (டான்சியா) துணை தலைவர் சுருளிவேல் கூறியதாவது,

கொரோனா முதல் அலையை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குமேல் நிலவிய மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்களால் இரண்டு ஆண்டுகள் நெருக்கடியில் இருந்து மீண்டுவர முடியாத அளவுக்கு மோசமாக மாற்றியது.

தற்போதுதான் மெல்ல இயல்பு நிலையை நோக்கி தொழில் நிறுவனங்கள் திரும்ப தொடங்கி உள்ளன. தினமும் தொழிலாளர்களின் உடல் வெப்பம் மட்டுமின்றி, பல்ஸ் ஆக்ஸிஜன் அளவு, முகக் கவசம் கட்டாயம் அணிதல், பணியாற்றும் போதும், உணவு இடைவெளி, டீ இடைவெளி உள்ளிட்ட சமயங்களிலும் கேன்டீன் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உற்பத்தி நிறுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கும் நிலைக்கு தள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...