உடுமலை அருகே யானையை பார்த்து ஓடிய பெண் கீழே விழுந்து காயம்!

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஈசல்திட்டு பகுதியைச் சேர்ந்த சின்னக்கா(40). இவர் பொருட்கள் வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தபோது, யானை வழிமறித்தால், பயந்து ஓடிய போது கீழே விழுந்து காயமடைந்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே யானைக்கு பயந்து ஓடியபோது பெண் கீழே விழுந்து காயமடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், ஆட்டுமலை, பொறுப்பாரு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி, ஈசல்திட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, கருமுட்டி உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

இதற்குத் தேவையான இடுபொருட்களை வாங்கவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அடிவாரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. வனப்பகுதியில் பாதை இல்லாததால் சில சமயத்தில் விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈசல்திட்டை சேர்ந்த சின்னக்கா (40) என்பவர் பிற்பகல் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மலை அடிவாரப் பகுதிக்கு வந்தார்.

பின்னர் பொருட்கள் வாங்கிக்கொண்டு குடியிருப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். இத்திபாழி என்ற இடத்தில் சென்றபோது புதரில் மறைந்து இருந்த யானையை பார்த்து அச்சமடைந்த சின்னக்கா தப்பி ஓட முயற்சித்த போது எதிர்பாரத விதமாக கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அதன்பின்னர் யானை அங்கிருந்து சென்று விட்டது. அதைத் தொடர்ந்து உடன் வந்த மலைவாழ் மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



வனச்சரக அலுவலர் சிவக்குமார் உத்தரவின் பேரில், வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று சின்னக்காவிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...