திருப்பூரில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி - மூவர் கைது!

திருப்பூரில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த காண்டிராக்டர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த கட்டிட கான்ட்ராக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அவினாசி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (44). கட்டிட கான்ட்ராக்டரான இவரது டிரைவர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த முருகன் (27). இவர்களது நண்பர் அவினாசியை சேர்ந்த பழனிசாமி (60) ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்டிட கான்ட்டிராக்டரான கனகராஜ், திருமுருகன்பூண்டி நெருப்பெரிச்சல், கணக்கம்பாளையம் பகுதிகளில் அரசு சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு தலா 10 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார்.

கனகராஜ் கட்டிட கான்ட்ராக்டர் என்பதால் அவரது வட்டாரத்தில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார். இதேபோல் அவரது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் முருகன் ஆகியோரும் அவர்களது பங்கிற்கு சிலரிடம் இருந்து அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாகக்கூறியும், அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறியும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கனகராஜிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கு அவரிடம் இருந்து கமிஷனும் பெற்று வந்துள்ளனர். மேலும், பணம் கொடுத்தவர்கள் நம்பும் வகையில் போலியாக ஒதுக்கீடு ஆணைகள் தயாரித்தும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு பணம் கொடுத்தவர்கள் பல மாதங்கள் ஆகியும் வீடு கிடைக்காததால் இது குறித்து கனகராஜிடம் கேட்க தொடங்கியுள்ளனர். இதனால் கனகராஜ் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

இதனால் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் இது குறித்து திருப்பூர் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இந்த புகார் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.



காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் திருப்பூரில் பதுங்கியிருந்த கனகராஜ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பழனிச்சாமி, முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது, கனகராஜ் மற்றும் பழனிச்சாமி, முருகன் ஆகிய 3 பேரும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி திருப்பூர் பகுதிகளில் உள்ளவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர்.

தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்கும் வகையில் வீடு ஒதுக்கீடு கேட்டவர்களுக்கு போலியாக ஆணை தயாரித்து கொடுத்துள்ளனர். சுமார் 63 பேரிடம் ரூ.96 லட்சம் வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கனகராஜூக்கு முகவர்களாக பழனிச்சாமியும், முருகனும் செயல்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களுக்கு வேறு ஏதேனும் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...