கோவை அருகே கார் கவிழ்ந்து விபத்து - 5 மாத பெண் குழந்தை பலி, 7 பேர் காயம்!

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்த நவீன், தனது 5 மாத பெண் குழந்தைக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குருவாயூர் கோவிலுக்கு சென்று காரில் திரும்பிக் கொண்டிருந்தார். கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி 5 மாத குழந்தை உயிரிழந்தது. காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: மதுக்கரை அருகே கார் விபத்துக்குள்ளானதில் 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது. மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை நவீன், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத குழந்தையான பிரதிக்‌ஷாவிற்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக, நவீன் மற்றும் காயத்ரி வீட்டார் என குடும்பத்துடன் கேரளா மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் மீண்டும் கோவை வழியாக ஈரோடு நோக்கிச் சென்றனர்.

அப்போது கார் கோவை மதுக்கரை நெடுஞ்சாலை போடிபாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் இருந்த நவீன், தலையனையை பின்னால் எடுத்து கொடுத்தாக தெரிகிறது.



இதனால், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்புக்கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரின் முன் இருக்கையில் காயத்ரியிடம் இருந்த 5 மாத குழந்தை பிரதிக்‌ஷா காரில் இருந்து வெளியே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தில், நவீன், காயத்ரி உள்ளிட்ட 7 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.



சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன் உள்ளிட்டோரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் கார் அகற்றப்பட்டது. இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...