டாப்சிலிப் மலைவாழ் குடியிருப்பில் மின்வசதி வழங்கக்கோரி நூதன போராட்டம்

பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரி கையில் தீப்பந்தம் ஏந்தியும், டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து, உலாந்தி வனத்துறை அலுவலகம் முன்பு மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கோழிக்கமுத்தி, கூமட்டி மற்றும் எருமைபாறை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு மின்சார வசதி இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எருமைபாறை பகுதியில் டிரான்ஸ்பாரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



இதை கண்டித்தும், வீடுகளுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி, உலாந்தி வனசரகர் அலுவலகம் முன்பு மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தியும், டிவி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுலாத்தலமான டாப்சிலிப்பில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.



ஆனால் மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு மின்சார வசதி செய்து தர வனத்துறை மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கொடுக்கப்பட்ட டிவி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் ஆகியவற்றை தற்போது வரை ஒருநாள் கூட பயன்படுத்தாமல் வெறும் காட்சி பொருளாகி உள்ளது.



மேலும் 10 ஆண்டுகளாக பணியாற்றும் SC/ST வன ஊழியர்களைப் பணி நிரந்தரப்படுத்தி ரூ.15,000 ஊதியம் வழங்க கோரியும், மலைவாழ் மக்களுக்கு பாதுகாப்பான வீடு, குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

தகவலறிந்து வந்த ஆனைமலை போலீசார் மற்றும் வனத்துறையினர் கூடிய விரைவில் மின் வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறியதையடுத்து மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...