கொரோனா பரவல் எதிரொலி - கோவையில் வார்பட தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

கொரோனா பரவலால், பணி ஆணைகள் குறைந்துள்ளதால் கோவையில் வார்பட தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் கோவை திரும்பியதால், அவர்களுக்கு தடையில்லாமல் வேலைவாய்ப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.


கோவை: கொரோனா பரவலால் கோவையில் வார்பட தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வார்பட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆட்டொமொபைல், பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு முக்கிய மூலப்பொருளாக வார்படம் பயன்படுத்தப்படுகிறது.

கோவையில் உற்பத்தி செய்யப்படும் வார்படம் இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் டிராக்டர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் வார்பட தேவை அதிகரித்த காரணத்தால் உற்பத்தியில் சீரான வளர்ச்சி இருந்தது. தற்போது உலகளவில் மீ்ண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல், வார்பட தொழில் நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பணி ஆணைகள் குறைந்துள்ளதால் கோவையில் வார்பட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வார்பட நிறுவனங்களின் தேசிய தொழில் அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’(ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துக்குமார், கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:



இரும்பு, ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட வார்பட தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

இதுதவிர உலகளவில் மீண்டும் வேகமெடுத்து வரும் கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக வார்பட பணிஆணைகள் வெகுவாக குறைந்துள்ளன. இவ்விரு காரணங்களால் வார்பட தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் எடைகுறைந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், எதிர்வரும் நாட்களில் வார்பட தேவையும் அதிகரிக்கும். மேலும் 3டி பிரிண்டிங் டெக்னாலஜி, ஆட்டோமேஷன் உள்ளிட்ட நடவடிக்கைகளால் வார்பட உற்பத்திக்கான செலவு குறையும்.

இதனால் வார்பட தொழில் நிறுவனங்கள், நிதானமாகவும் நிலையாகவும் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து மீண்டுவரத் தொடங்கும். மேலும் கொரோனா நோய்தொற்று பரவிலின் தாக்கம் குறையும் போது உலகளவில் வார்பட தேவை மீண்டும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை குறு, சிறு வார்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தின்(காஸ்மாபேன்) தலைவர் சிவசண்முககுமார் கூறுகையில்,



மூலப்பொருட்கள் விலையில் தற்போது தினமும் மாற்றம் காணப்படுகிறது. இது ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது. குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மூலப்பொருட்களின் விலை சீராக உள்ளதை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான், குறு, சிறு வார்பட தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீண்டுவர வாய்ப்பு ஏற்படும். சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கோவைக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு தடையில்லாமல் பணி வாய்ப்பு வழங்க முடியுமா என்ற சந்தேகத்தில் தொழில்முனைவோர் உள்ளனர், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...