மூலனூரில் இரவு நேரத்தில் இயங்காத 108 ஆம்புலன்ஸ் - மருத்துவ உதவிக்கு அல்லல்படும் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் அவசர மருத்துவ உதவிக்கு மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர். 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில், போதிய பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்தில் கன்னிவாடி, மூலனூர் என இரண்டு பேரூராட்சிகள் 12 ஊராட்சிகள் உள்ளடக்கிய மூலனூர் ஒன்றியத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு விசைத்தறி, நூற்பாலைகள், தனியார் நிறுவனங்கள் என 20- க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு- ஒட்டன்சத்திரம், பழனி- கொடுமுடி ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் முக்கிய இடம் மூலனூர் ஆகும். இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும் இடமாகும். இந்த ஊரில் போதிய மருத்துவமனை இல்லாததால் அவசர காலங்களில் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

மேலும் உயர் சிகிச்சைக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை 75 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூர் அல்லது 50 கிலோ மீட்டர் தூரத்தில் கரூர் அல்லது ஈரோடு போன்ற அண்டை மாவட்ட பெருநகரங்களுக்குதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், மூலனூர் சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலானவை கிராம பகுதிகள் என்பதால், குறித்து நேரத்திற்கு போதிய பேருந்து வசதிகளும் இருப்பதில்லை. மூலனூரில் தற்போது இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் பகல் நேரங்களில் மட்டுமே இயங்கி வருகின்றது. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இரவு நேரத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்தால் தாராபுரம், வெள்ளகோவில் அல்லது சின்ன தாராபுரம் பகுதிகளில் இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டிகளே வர வேண்டியுள்ளது. அதுவும் குறித்த நேரத்திற்கு வருவதில்லை. ஏனெனில் தாராபுரத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் திருப்பூர் அல்லது கோவை ஆகிய பகுதிகளுக்கு சென்று விடுகிறது. வெள்ளகோவில் இருக்கும் ஆம்புலன்ஸ் அருகில் ஈரோடு சென்று விடுகிறது.

சின்னதாராபுரத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் அருகில் உள்ள கரூர் சென்று விடுகிறது. இதனால் மூலனூர் பகுதிக்கு இரவு நேரத்தில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதில்லை. 108க்கு அழைத்தால் ஓட்டுநர் இல்லாத காரணத்தால் மூலனூர் 108 ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை என்று கூறுகின்றனர். அதனால் உங்களுக்கு வேறு வண்டிதான் வரும் என்று கூறுகின்றனர்.

ஆனால் மூலனூரில்தான் அந்த ஆம்புலன்ஸ் நிற்கும். இதை உறுதிப்படுத்திக்கொள்ளும்வகையில், ஒருவர் மூலனூர் அண்ணா நகரில் நிற்கும் 108 ஆம்புலன்ஸ் வண்டி அருகே சென்று நின்று கொண்டு 108-க்கு அழைத்துள்ளார். எதிர் திசையில் மூலனூர் ஆம்புலன்ஸ் வெளியில் சென்று விட்டது. அதனால் உங்களுக்கு வேறு வண்டிதான் வரும் என்று பதில் அளித்தனர்.

பொதுவாக ஒரு 108 ஆம்புலன்ஸ்க்கு ஒரு ஓட்டுனர் ஒரு உதவியாளர் வீதம் இரண்டு ஷிப்ட்க்கு நான்கு பேர் இருப்பார்கள். ஆனால், மூலனூர் வண்டிக்கு ஒரு ஓட்டுனர் ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளனர். காலையில் 8 மணிக்கு வரும் இவர்கள், இரவு 8 மணிக்கு திரும்பி விடுவார்கள். மீண்டும் அடுத்த நாள் காலை 8 மணிக்கு தான் வருகின்றனர்.

இரவு நேரத்தில் வண்டி நின்றே இருக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மூலனூரில் 108 ஆம்புலன்ஸை 24 மணி நேர சேவையாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...