கோவையில் போதைப்பொருள் விற்பனைக்கு ரூட் போட்ட விவகாரம் - போலீஸ், வழக்கறிஞர் கைது!

கோவையில் போலீசில் சிக்காமல் இருக்க போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த போலீஸ் மற்றும் வழக்கறிஞரையும் சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் விற்பதாகக் கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் போதை பொருள் தடுப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் சுஜி மோகன் உட்பட 7 பேர் போதை பொருட்களை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அந்த கும்பல், பெங்களூருக்கு தப்பி சென்றனர்.

போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி பெங்களூர் சென்று சுஜி மோகன் உட்பட 7 பேரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்து 50 கிராம் மெத்தபிட்டமின் என்ற போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அவர்கள் 7 பேரையும் கோவை அழைத்துவந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், ஒருவர் போலீசில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? தப்பு செய்வது எப்படி? போலீசார் நடமாட்டம் எங்கெல்லாம் உள்ளது? யாரையெல்லாம் போலீசார் தேடுகின்றனர் என்று தகவல் கூறும் ஆடியோக்கள் இருந்தன.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த ஆடியோவில் பேசியது போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த நபர் சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 32) என்பதும், இவர் கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இவருக்கு உடந்தையாக போத்தனூர் அங்காளம்மன் கோயில் வீதியை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிப் (வயது30) என்பவரும் இருந்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் சரவணம்பட்டி போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர்.

போதைப் பொருள் விற்பனைக் கும்பலுக்கு உதவியாக இருந்ததாக காவலரும், வழக்கறிஞரும் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...