பல்லடம் அருகே பங்காளி சண்டைக்கு பலியான பனை மரங்கள் - போலீசாரை கண்டித்து நூதனப் போராட்டம்!

பல்லடம் அருகே கள்ளம்பாளையம் கிராமத்தில் பங்காளி சண்டையில் 36 பனை மரங்கள் இரவோடு இரவாக தோண்டி வீசப்பட்ட விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பனை மரங்களுக்கு மலர் தூவி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு கள்ளம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மனைவி மரகதம். மரகதத்தின் பெயரில் நாலரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. மரகதத்தின் மகன் வடிவேல் இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இதில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த 40 பனை மரங்களையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், மரகதத்திற்கு சொந்தமான நிலத்திற்கு நடுவே, அருகில் உள்ள அவரது அண்ணன் ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடம் அமைந்துள்ளது.



இந்த பொது வழித்தடத்தை அகலப்படுத்துவதற்காக ஆறுமுகம் மற்றும் அவரது மகன்கள் சிவசங்கர், சுப்பிரமணி மற்றும் யுவராஜ் ஆகிய நான்கு பேரும் சேர்ந்து கடந்த மே 6ஆம் தேதி அன்று முன்பு இரவு 11 மணி அளவில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 80 ஆண்டுகள் பழமையான 36 பனை மரங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்தனர்.

தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்குச் சென்ற வடிவேல், பனை மரங்கள் முழுவதுமாக வேரோடு தோண்டி வீசப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகம் மற்றும் அவரது மகன்களிடம் கேட்டபோது, நாங்கள் அப்படித்தான் செய்வோம் நீ எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் வடிவேல் புகார் அளித்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் பனை மரங்களை தோண்டி வீசிய சிவசங்கர் மற்றும் யுவராஜ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் காவல்துறையினர் பனை மரங்களை தோண்டி வீசிய நபர்கள் மீது சாதாரண வழக்கு மட்டும் பதிவு செய்து குற்றவாளிகளை தப்பிக்க வைத்ததாகவும்,



ஜேசிபி இயந்திரங்கள் இன்று வரை பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் கூறி இன்று பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தினர் பலியான பனை மரங்களுக்கு மலர் தூவி, பனை மரங்களை அழிக்காதே என்ற பதாகைகளை ஏந்தியபடி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனை மரங்களை தோண்டி வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனவும், 40 பனை மரங்களை தோண்டிய நபர்களையே 400 பனை மரங்களை நட வைக்கவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...