பல்லடம் திமுக நகரத் தலைவர் மீது பெண் புகார் - போலி பத்திரம் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் போலி பத்திரம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்டதாக, திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி உஷா குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. பனியன் தொழிலாளியான இவர் தனது மனைவி உஷா மற்றும் தனது மகனுடன் ராயர்பாளையத்தில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.



இவரது மனைவி உஷா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் மகளிர் அணி துணை அமைப்பாளராகவும், தற்போது பல்லடம் நகர ஏழாவது வார்டு பொறுப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு உஷாவின் குடும்பத்தினர் ராயர்பாளையத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான மூன்றரை சென்ட் இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டினை அப்போதைய திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்த குமரேசன் என்பவர் மூலமாக வாங்க முடிவு செய்துள்ளனர்.

இடம் மற்றும் வீடு மொத்தமாக 14 லட்சம் ரூபாய்க்கு பேசி முடிக்கப்பட்டு 5 லட்சம் ரூபாயை உஷா முன்பணமாக சத்தியசீலனிடம் கொடுத்துள்ளார். சத்தியசீலனின் வீட்டு பத்திரம் வீரபாண்டி பகுதியில் உள்ள சிவலிங்கம் என்பவரிடம் அடமானம் உள்ளதாகவும் மீதி பணத்தை சிவலிங்கத்திடம் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கிக் கொள்ளுமாறு சத்தியசீலன் கூறியுள்ளார்.

உஷாவும் மேலும் 5 லட்சம் ரூபாய் பணத்தை சிவலிங்கத்திடம் கொடுத்துவிட்டு பத்திரத்தை வாங்கி வந்துள்ளார். உஷாவின் பெயருக்கு பத்திரத்தை கிரயம் செய்யாமல் இழுத்தடித்து வந்த சத்தியசீலன், பத்திரத்தை கொடுங்கள் இரண்டு நாட்களில் கொடுத்து விடுகிறோம் என உஷாவிடம் கேட்டுள்ளார்.



நான் கொடுத்த 10 லட்சம் ரூபாயை கொடுத்தால்தான் பத்திரத்தை தருவேன் என உஷா கூறிய நிலையில், சத்தியசீலன் ஐந்து லட்சம் ரூபாய்க்கு காசோலை ஒன்றினை உஷாவிடம் கொடுத்துள்ளார்.

காசோலையை வங்கியில் கொடுத்தபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரிவித்ததால் சத்தியசீலன் மீது உஷா செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமாரின் உதவியோடு சத்தியசீலன் போலி பத்திரம் தயாரித்து திருப்பூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு அந்த இடத்தினை விற்பனை செய்துள்ளார். வீட்டின் மூலப்பத்திரம் என்னிடம் இருக்கும்போது வேறொருவருக்கு எப்படி இடத்தை விற்பனை செய்யலாம் எனக்கூறி உஷா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்நிலையில் பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், உஷாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி தர முடியாது எனவும் வழக்கு தொடுத்தால் என்னை எதுவும் செய்ய முடியாது எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பனப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் பல்லடம் நகர செயலாளர் மீது தொடுத்த செக் மோசடி வழக்கில் நேற்று முன்தினம் பல்லடம் குற்றவியல் நீதிமன்றம் ராஜேந்திர குமாருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.



இந்த நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட உஷா என்பவரும் ராஜேந்திர குமார் போலி பத்திரம் தயாரித்து தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்து விட்டதாகவும், தனது மகனுக்கு கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், தனது 10 லட்சம் ரூபாய் பணத்தை மீட்டுக் கொடுக்க உதவும் மாறும் அமைச்சர் மு.பெ சாமிநாதன் மற்றும் அறிவாலயத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு இதுகுறித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பல்லடம் நகர செயலாளரால் தான் இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு மனு அளிக்க வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பாப்பிலான் என்பவரை சாதிப் பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தது, செக் மோசடி வழக்கில் பல்லடம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது என அடுத்தடுத்து புகார்களில் பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திர குமார் சிக்கிவரும் நிலையில், தற்போது நிலமோசடி செய்து விட்டதாக திமுக பெண் நிர்வாகி அளித்துள்ள புகாரால் பல்லடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...