கோவையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலம் மீட்பு!

கோவை போத்தனூர் அருகே வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை பள்ளி வாசல் முன்னாள் நிர்வாகிகள் மூவர் இணைந்து சட்டவிரோதமாக தனிநபருக்கு விற்பனை செய்த நிலையில் குறிப்பிட்ட நிலம் மற்றும் ஓட்டு வீடு ஆகியவை மீட்கப்பட்டு, மீண்டும் வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போத்தனூர் கடைவீதி பகுதியில் மஸ்ஜித்துல் மதினா சுன்னத் வல் ஜமாத் உள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த மஸ்ஜித்துல் மதினா சுன்னத் வல் ஜமா அத்தின் உதவி தலைவர் பொறுப்பில் முகமது ஷாக்கீர் என்பவர் இருந்தார்.

கடந்த 1998 ஏப்ரல் மாதம் இவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி வாசலில் பணிபுரியும் இமாம் தங்குவதற்காக இடம் ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே 826 சதுரடி நிலம் வாங்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 2005ஆம் ஆண்டு பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கலீம் பாட்ஷா,

முன்னாள் செயலாளர் முகமது சாதிக் பாஷா, முன்னாள் முத்தவல்லி ஆசிப் காதர் பாஷா ஆகிய மூவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் பள்ளிக்கு சொந்தமான இடத்தை 2005ம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிக்கு சம்பந்தமில்லாத பஷீர் என்ற நபருக்கு முறைகேடாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலர் மற்றும் கோவை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் போத்தனூரைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். 

ஆனால் தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலம்கடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போத்தனூர் பகுதி பொதுமக்கள் சார்பில், பார்விஷ்கான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வக்ஃபு வாரிய சொத்தை முறைகேடாக விற்பனை செய்த முன்னாள் தலைவர் கலீம்பாட்சா, முகமது சாதிக் பாட்ஷா, அசிப் காதர் பாட்சா மூவரிடம் சென்னை தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான குழு, 2 மாத காலத்திற்குள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், குறிப்பிட்ட அந்த நிலம் மற்றும் ஓட்டு வீடு ஆகியவை மஸ்ஜித்துல் மதினா சுன்னத் வல் ஜமாத் பள்ளி வாசல் பெயரில் கடந்த 30.04.1998 அன்று பள்ளிவாசல் கட்டிட நிதியில் இருந்தும், ரமலான் கஞ்சி நிதியில் இருந்தும் வாங்கப்பட்டது என்பதும், 

இதனை, பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கலீம் பாட்ஷா, முன்னாள் செயலாளர் முகமது சாதிக் பாஷா, முன்னாள் முத்தவல்லி ஆசிப் காதர் பாஷா ஆகிய மூவரும் சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக தனிநபருக்கு விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட அந்த நிலம் மற்றும் வீடு ஆகியவை மீட்கப்பட்டு மீண்டும் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...