பல்லடத்தில் 5 தலைமுறைகளை கண்ட 103 வயது பாட்டி - பல்வேறு நாடுகளில் இருந்து உறவுகள் இணைந்த தலைமுறை சங்கம நிகழ்ச்சி!

103 வயதை கடந்த தெய்வாத்தாள் என்ற பாட்டியின் பிறந்த நாளையொட்டி உறவுகள் ஒன்றிணையும் தலைமுறை சங்கம நிகழ்ச்சியில், மூன்று மகன்கள் மற்றும் நான்கு மகள்கள், 17 பேரன், பேத்திகள், மற்றும் 35 கொள்ளு பேரன், பேத்திகள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 103 வயதை கடந்த பாட்டியின் உறவுகள் ஒன்றிணையும் தலைமுறை சங்கம நிகழ்ச்சி கோலாகமாக நடைபெற்றது.

நகரமயமாதலின் விளைவாக கூட்டுக் குடும்பங்கள் என்ற அழகிய அமைப்பு இன்றைய காலத்தில் குறைந்து வரும் நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு உறவுகள் என்ற வேர்களை தேடி செல்லும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம்.



பல்லடம் அருகே வேலப்பகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி கவுண்டர்-வேலாத்தாள் தம்பதியினரின் குடும்ப உறவுகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த "தலைமுறை சங்கமம்" என்ற நிகழ்ச்சி பல்லடத்தில் இன்று நடைபெற்றது.

குமாரசாமி கவுண்டர் - வேலாத்தாள் ஆகியோரின் மகள் தெய்வத்தாள், ஆறுச்சாமி சின்னச்சாமி, குமாரசாமி, கணபதி கவுண்டர் மற்றும் சின்னப்ப கவுண்டர் ஆகிய ஆறு பேரின் குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக விரிவடைந்த நிலையில் பலரும் வேலை, தொழில், படிப்பு என பல்வேறு ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றதால் 30 ஆண்டுகளாக சொந்தங்கள் பிரிய தொடங்கியது.



இதில் நான்கு பேர் மறைந்த நிலையில் 103 வயதான தெய்வத்தாள் மற்றும் அவரது தம்பி 85 வயதான ஆறுச்சாமி ஆகியோர் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். 5 தலைமுறைகளை கண்ட 103 வயதுடைய தெய்வத்தாளுக்கு மூன்று மகன்கள் மற்றும் நான்கு மகள்கள், 17 பேரன், பேத்திகள், மற்றும் 35 கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர்.

தெய்வத்தாளின் குடும்பத்தினர் மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் என மொத்தமாக நேரடி உறவினர்கள் 200 பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாடுகளிலும் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறங்கினர்.

6 மாதங்களாக அனைவரையும் கண்டுபிடித்து தொடர் முயற்சியால் இன்று சேலம், ஈரோடு, திருச்சி, திருப்பூர், என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிங்கப்பூர் அமெரிக்கா என வெளிநாடுகளில் இருந்தும் தங்களது குடும்பத்தோடு இன்று பல்லடத்தில் சங்கமித்து ஒருவருக்கொருவர் தங்களது உறவுகளை புதுப்பித்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மறைந்த பெரியோர்களின் புகைப்படத்தை வைத்து அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் தங்களது தாத்தா பாட்டி என அனைவரையும் அமர வைத்து அவர்களிடம் ஆசி பெற்றும், குடும்பத்தோடு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்வு குறித்து பேசிய தெய்வாத்தாளின் மருமகள் புனிதா கூறியதாவது, தனது அத்தை 103 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்வதை கொண்டாடும் வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். தனது அத்தை நேரத்திற்கு சரியான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வார். எந்த ஒரு சூழ்நிலையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் அதை சாதாரணமாக கடந்து வருவார்.

103 வயதிலும் அவரது வேலையை அவரே செய்து கொள்கிறார். வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு செயல்பட்டதால் மட்டுமே ஆறு தலைமுறைகளை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக குழந்தைகளின் நடன நிகழ்ச்சி,சிலம்பம் சுற்றுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. கூட்டுக் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் உறவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...