ஓராண்டில்‌ ஒரு கோடி மரங்கள்‌ நடவு - காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சாதனை!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ மூலம்‌ தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன்‌ மாதம்‌ 5 ஆம்‌ தேதி தொடங்கி, இந்த ஆண்டு மார்ச்‌ 31 வரை 1,01, 42,331 மரக்கன்றுகள்‌ நடவு செய்து சாதனை படைத்துள்ளது.



கோவை: ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கிய காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ தமிழக விவசாயிகளின்‌ பேராதரவுடன்‌ கடந்த ஓராண்டில்‌ ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு செய்து மாபெரும்‌ சாதனை படைத்துள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஜூன்‌ மாதம்‌ 5 ஆம்‌ தேதி தொடங்கி, இந்த ஆண்டு மார்ச்‌ 31 வரை 1,01, 42, 331 மரக்கன்றுகள்‌ விவசாயிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ மூலம்‌ நடப்பட்டுள்ளது.

மாநில அளவில்‌ நடத்தப்பட்ட மரம்‌ நடும்‌ விழாக்கள்‌, விவசாயிகளின்‌ தலைமையில்‌ இயங்கும்‌ நாற்று பண்ணைகள்‌, விவசாயிகளுக்கான மெகா பயிலரங்கங்கள்‌, கருத்தரங்கங்கள்‌ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தியதன்‌ மூலம்‌ இந்த இலக்கு சாத்தியமாகி உள்ளது.

பிரமாண்ட இலக்கான ஒரு கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து அதை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும்‌ பணியில்‌ ஈஷாவின்‌ நாற்றுப்‌ பண்ணைகள்‌ முக்கிய பங்கை வகித்தன. 

தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள 40 ஈஷா நாற்றுப்‌ பண்ணைகளில்‌ தேக்கு, செம்மரம்‌, சந்தனம்‌ போன்ற விலை மதிப்புமிக்க 19 வகையான டிம்பர்‌ மரக்கன்றுகள்‌ வெறும்‌ 3 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும்‌, காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ களப்‌ பணியாளர்கள்‌ கடந்தாண்டு சுமார்‌ 20,000 விவசாயிகளின்‌ நிலங்களுக்கு நேரில்‌ சென்று மரம்‌ சார்ந்த விவசாயம்‌ தொடர்பாக இலவச ஆலோசனைகள்‌ வழங்கியுள்ளனர்‌.

இந்த குழுவினர்‌, மரம்‌ சார்ந்த விவசாயத்திற்கு மாறுவதால்‌ ஏற்படும்‌ நன்மைகள்‌ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ விதமாக நூற்றுக்கணக்கான உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்கள்‌, தன்னார்வ தொண்டு அமைப்புகள்‌ மற்றும்‌ அரசு அதிகாரிகளை சந்தித்து கூட்டங்களை நடத்தியுள்ளனர்‌. 

மேலும்‌, பல்வேறு விவசாய கண்காட்சியில்‌ பங்கெடுத்து 1 லட்சம்‌ கையேடுகளை விநியோகித்திருப்பதும்‌ குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, உலக சுற்றுச்சூழல்‌ தினம்‌, வன மஹோத்சவம்‌, சத்குருவின்‌ பிறந்த நாள்‌, நம்மாழ்வார்‌, நெல்‌ ஜெயராமன்‌ மற்றும்‌ மரம்‌ தங்கசாமி ஆகியோரின்‌ நினைவு நாட்கள்‌, காந்தி ஜெயந்தி ஆகிய 7 முக்கிய தினங்களின்‌ போது மாநில அளவில்‌ மாபெரும்‌ மரம்‌ நடும்‌ விழாக்கள்‌ நடத்தப்பட்டன.

இதன் மூலம்‌ அந்த நாட்களில்‌ மொத்தம்‌ சுமார்‌ 12.50 லட்சம்‌ மரக்கன்றுகளை விவசாயிகள்‌ தங்கள்‌ நிலங்களில்‌ நடவு செய்தனர்‌.

மரம்‌ நட விரும்பும்‌ விவசாயிகள்‌ பல்வேறு விதமான மரம் சார்ந்த விவசாய முறைகளை தெரிந்து கொள்ளவும்‌, லாபகரமாக மர விவசாயம்‌ செய்து வரும்‌ முன்னோடி விவசாயிகளை நேரில்‌ சந்தித்து ஆலோசனைகள்‌ பெறவும்‌ 5 மெகா பயிலரங்குகள்‌ வெவ்வேறு மாவட்டங்களில்‌ கடந்தாண்டு நடத்தப்பட்டன. 

இதில்‌ சுமார்‌ 5000 மேற்பட்ட விவசாயிகள்‌ பங்கேற்று பயன்பெற்றனர்‌. இதுமட்டுமின்றி, கோவை தொண்டாமுத்தூர்‌ ஒன்றியத்தில்‌ 'பசுமை தொண்டாமுத்தூர்‌' என்ற திட்டத்தின்‌ மூலம்‌ சுமார்‌ 2 லட்சம்‌ டிம்பர்‌ மரக்கன்றுகள்‌ விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

100க்கும்‌ மேற்பட்ட வாட்சப்‌ குழுக்கள்‌ மூலம்‌ சுமார்‌ 17,000 விவசாயிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அதில்‌ விவசாயிகள்‌ கேட்கும்‌ தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களுக்கு துறை சார்ந்த வல்லுனர்கள்‌ ஆலோசனைகள்‌ வழங்கி வருகின்றனர்‌.

இவ்வாறு பல்வேறு விதமான தொடர்‌ முயற்சிகள்‌ மற்றும்‌ அயராத களப்‌ பணியின்‌ மூலமே இந்த மாபெரும்‌ சாதனை சாத்தியமாகியுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...