அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், செந்தில் பாலாஜி வீட்டு சோதனை நடப்பதற்கு முன்பே, இப்போது ஒரு அமைச்சர் வருங்காலத்தில் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதில் இருந்து அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று சந்தேகம் எழுகிறது என தெரிவித்தார்.



கோவை: பாஜகவின் ஆட்சியில் அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



நமது நாடு ஒரு ஜனநாயக நாடு இது எவ்வாறு இயங்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம். ஆட்சியில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் அவர்கள் அனைவரும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அதனை மதித்து அதன் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைபாடு பாதுகாக்கப்படும்.

ஆனால் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு படிப்படியாக தற்போது வேகமாக அரசியலமைப்பு சட்டங்களை தகர்த்து எதேச்சதிகாரமாக செயல்படும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இரண்டாம் உலக போருக்கு காரணமாக இருந்த ஹிட்லர் மற்றும் அவர் உடன் இருந்தவர்கள், நடவடிக்கையாலும் சர்வாதிகாரத்தாலும் லட்சக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். அங்கு ஹிட்லர் என்பதைப் போல் இங்கு மோடி, அமித்ஷா கூட்டணி உள்ளது. 

இவர்கள் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டம் தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமக்களுக்கும் கருத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ஆனால் மோடி - அமித்ஷா கூட்டணி மாற்றுக் கருத்திற்கு இடமில்லை நாங்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும், நாங்கள் போடுகின்ற சட்டத்தை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுப்போம், என்கின்ற அணுகுமுறையில் தான் இருந்து வருகிறது. 

குறிப்பாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்புகள், ஆனால் தற்போது இவைகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அவர்களுடைய நடவடிக்கை என்பது தங்களுடைய கொள்கைக்கு ஆதரவாக இல்லை என்ற காரணத்தினால் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானவரித்துறை அமலாக்க துறை இவைகளை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு ஜனநாயக விரோத செயல், சர்வாதிகார செயல். இது நாட்டிற்கு நல்லதல்ல. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களும் தவறாக நடத்தப்படுகிறார்கள். அரசியலுக்கு அரசியல் ரீதியாக தான் தீர்வு காண வேண்டுமே தவிர வேறு காரணங்கள் மூலம் தீர்வு காணக்கூடாது, அவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டால் அது சர்வாதிகாரம் அந்த சர்வாதிகாரத்தை தான் மோடி அமித்ஷா கூட்டணி நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. 

செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் செய்த தவறுக்காக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது அதனை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதற்கான நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும். செந்தில் பாலாஜி  விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தும் கூட, சமூகவிரோதியை போலும் கொலை குற்றவாளியை போலும் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியது.

திறந்த வீட்டில் நாய் புகுந்ததை போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?. அதேபோல் அமைச்சரவையில் யார் எந்த அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது முதல்வர் தான். முதலமைச்சர் பரிந்துரை செய்பவரை பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டியவர் ஆளுநர். அதுதான் ஆளுநரின் வேலையும் கூட. யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. 

தமிழ்நாடு ஆளுநர் மற்றும் அல்லாமல் பிற மாநில ஆளுநர்கள் சிலர் மீதும் உச்ச நீதிமன்றம் ஆளுநர்களுக்கு தனி அதிகாரம் கிடையாது என கடுமையான விமர்சனங்களை செய்துள்ளது. அரசியல் நெருக்கடியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்கின்ற முறையில் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளது. படித்து முடித்த மாணவர்களுக்கும் கூட ஆளுநரால் இதுவரை பட்டங்கள் வழங்க முடியவில்லை. ஆளுநர் தமிழகத்தில் போட்டி அரசியலை தொடர்ந்து செய்ய வேண்டும் என முயற்சிக்கிறார்.

ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்க கூடிய நம்பிக்கையை குலைத்தால் அவநம்பிக்கை தான் உருவாகும். குடியரசுத் தலைவரை வைத்து நாடாளுமன்றத்தை திறக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அது நிராகரிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு கூட குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை.

அவர் பெண் என்பதாலும் பழங்குடியின மக்களை சேர்ந்தவர் என்பதாலும் கணவரை இழந்த விதவைப் பெண் என்பதாலும் அவர் அழைக்கப்படவில்லை. எனவே அவரை வைத்து நாடாளுமன்றத்தை திறந்தால் அது அபசகுணமாக போய்விடும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். குடியரசுத் தலைவர் பெண் விதவை என்றால் பிரதமர் ஆண்விதவை போன்றவர்.

ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் பேசுகிறார், அப்படி என்றால் கர்நாடகாவில் 40 சதவிகிதம் கமிஷன் கேட்கப்பட்டது இவரது காதில் கேட்கவில்லையா?. அப்போது இந்த வருமான வரித்துறை அமலாக்கத்துறை எல்லாம் என்ன ஆயிற்று?. 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விட்டார்கள். இதன் காரணமாகவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றையெல்லாம் தவறாக பயன்படுத்தி, கொள்ளை புற வழியாக ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

இதையெல்லாம் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கர்நாடக மக்கள் தீர்ப்பளித்தது போல் நாடு முழுவதும் மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள். 

அரசியல் பழி வாங்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் ஏற்காது எதிர்த்து நிற்கும். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தற்போது அதிமுகவில் கூறி வரும் போது செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த போது தானே இந்த தவறு நடந்தது. அப்போதே ஏன் அவர் மீது அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை?. 

அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அதிகாரம் தற்போது அண்ணாமலையிடம் உள்ளது. அண்ணாமலை தற்போது ஒரு அமைச்சர் வரும் காலங்களிலும் அமைச்சர்கள் சிக்குவார்கள் என பகிரங்கமாக கூறும் போது இவருக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது? அண்ணாமலை ஒரு கட்சியின் மாநில தலைவர் மட்டுமே.

வருமானவரித்துறை செந்தில் பாலாஜியின் இடங்களில் சோதனை நடத்தும் முன்பே அண்ணாமலை கூறுகிறார் என்றால் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இந்த துறைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் படி சுதந்திரமாக செயல்படவில்லை என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. 

ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் ஒரு கட்சியை சார்ந்து செயல்படுகிறார் என கூறி அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு தலைவரிடமே புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...