கோவை வனக்கோட்டத்தில் மேலும் ஒரு வேட்டை நாய் சேர்ப்பு!

கோவை வனக்கோட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே சிப்பிப்பாறை இன நாய் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், டாபர்மேன் வகையை சேர்ந்த நாய் ஒன்று புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்கு போளுவாம்பட்டி வனச்சரகத்தில் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை வனக்கோட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக இரண்டாவது வேட்டை நாய் சேர்க்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

கோவை வனக்கோட்டத்தில் சுமார் 670 சதுரஅடி பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. அங்கு உள்ள வனவிலங்குகள் மற்றும் அரிய தாவரங்களை பாதுகாக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை வனத்துறை கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றவாளிகளை கண்டறியும் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அவர்களுக்கு உதவியாக வேட்டை நாய்களையும் பயன்படுத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கோவை வனச்சரக கோட்டத்துக்கு கடந்த ஆண்டு சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் வழங்கப்பட்டது. அந்த நாய்க்கு போளுவாம்பட்டியில் பயிற்சி தரப்பட்டு வேட்டை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை வனச்சரக கோட்டத்துக்கு மேலும் ஒரு வேட்டை நாய் வழங்கப்பட்டு உள்ளது. டாபர்மேன் வகையை சேர்ந்த இந்த நாய்க்கு பைரவா என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நாய்க்கு தற்போது போளுவாம்பட்டி வனச்சரகத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் தீவிர பயிற்சிகள் தரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை கோட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கோவை வனச்சரக கோட்டத்தில் ஏற்கனவே சிப்பிப்பாறை வகையை சேர்ந்த வளவன் என்ற வேட்டை நாய் பணியமர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு வேட்டை நாய் தரப்பட்டு உள்ளது. அதற்கு பைரவா என்று பெயர்சூட்டி உள்ளோம்.

இதற்கு போளுவம்பட்டி வனச்சரகத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் பயிற்சி கொடுத்து வருகிறோம். இது தவிர வாரம் ஒருமுறை நீச்சல் பயிற்சி தரப்பட்டு வருகிறது. கோவை கோட்ட வனச்சரகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள பைரவாவுக்கு மோப்பசக்தி உடன் பாய்ச்சல் திறனும் அதிகம்.

எனவே கோவை வனச்சரக கோட்டத்தில் அத்துமீறி நுழையும் சமூகவிரோதிகளுக்கு வளவனுடன் இனிமேல் பைரவாவும் சிம்மசொப்பனமாக இருப்பார்கள்.

இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...