வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.200 கோடி மோசடி - தலைமறைவாக இருந்த நபர் கைது!

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் வங்கியில் கடன் பெற்று தருவதாகவும், தொழிலில் பங்கு தாரராக இணைத்து கொள்வதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் 200 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கடன் பெற்று தருவதாக கூறி 50க்கும் மேற்பட்டோரிடம் 200 கோடிக்கும் மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 



பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையம் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது சகோதரர் விஜயகுமார் மற்றும் விஜயகுமாரின் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவீனா ஆகிய நால்வரும் சேர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோரிடம் தொழில் செய்வதற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். 

மேலும் தொழிலில் பங்குதாரராக சேர்ந்து கொள்கிறோம் எனக் கூறி ஐம்பதுக்கும் மேற்பட்டோரிடம் நிலம் மற்றும் வீட்டு பத்திரத்தை வாங்கி கொண்டு வங்கி கடன் பெற்று தராமல் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15 மேற்பட்டோர் சிவக்குமார் உள்ளிட்ட நான்கு பேரிடம் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் பணத்தை பெற்று தரும்படி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இவர்களது புகார் தொடர்பாக பல்லடம் போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், மாவட்ட ஆட்சியரிடமும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்ச்சியாக புகார் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் உட்பட நான்கு பேர் மீது, வழக்குப்பதிவு செய்து நால்வரையும் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, கடந்த மூன்று‌ மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் கைதான நிலையில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்ற பிடியாணை உத்தரவுப்படி தனிப்படை போலீசார் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரவீனாவை திருச்சியில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



நேற்றிரவு மோசடி மன்னன் சிவகுமார் தேனியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சிவகுமாரை தேனியில் வைத்து கைது செய்தனர். 



கைது செய்யப்பட்ட சிவகுமாரை பல்லடம் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவகுமாரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...