பல்லடத்தில் கந்து வட்டியை மிஞ்சிய தனியார் வங்கி - வீட்டு பொருட்களை தெருவில் வீசி அட்டூழியம்!

பல்லடம் அடுத்த அருள்புரம் செந்தூர் காலனியில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டு கடனை ஒரு மாத தவணை தொகையை கட்ட தவறிய பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவரை வீட்டில் இருந்து வெளியேற்றி, வீட்டை பூட்ட முயன்ற தனியார் வங்கி ஊழியர்களை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே வாங்கிய கடனில் ஒரு மாத தவணை செலுத்த தவறியதால், முதியவரை வெளியேற்றி வீட்டில் இருந்த பொருட்களை தெருவில் வீசிய தனியார் வங்கி ஊழியர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூர் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவி ருக்மணி மற்றும் தனது பேரன்கள் ஆகியோருடன் இங்கு வசித்து வருகிறார். 75 வயதான கந்தசாமி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ளார்.



இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு புது வீடு கட்டுவதற்காக அருள்புரத்தில் உள்ள "ஈக்விடாஸ்" என்ற தனியார் வங்கியில் தனது பேரன் தினேஷ் குமார் என்பவரின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். மாதம் 11 ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வரை தவணைத் தொகையை திருப்பி செலுத்தியுள்ளார்.

இந்த மாதம் பத்தாம் தேதி கட்ட வேண்டிய 11 ஆயிரம் ரூபாய் தவணை தொகையை குடும்ப சூழல் காரணமாக செலுத்தாமல் இருந்துள்ளார்.

20 நாட்கள் தாமதமான நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கந்தசாமியின் வீட்டிற்கு வந்த தினேஷ் மற்றும் மணி என்ற இருவர் தாங்கள் வங்கியில் இருந்து வருவதாகவும் இந்த மாதம் தவணைத் தொகையை இன்னும் கட்டாததால் உங்கள் வீட்டை பூட்டு போட வந்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, வீட்டில் உள்ள டிவி இருசக்கர வாகனம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல உள்ளோம் எனவும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.



இந்நிலையில் இன்று கந்தசாமியின் வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டிற்கு பூட்டு போட வேண்டும் எனக் கூறி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே போட்டுவிட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள 75 வயதான கந்தசாமியை சேரில் அமர வைத்து வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சாலையில் அமர்த்தி உள்ளனர்.



இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரு மாத தவணை தொகை கட்டாததற்காக வீட்டுக்கு பூட்டு போடுவீர்களா என கூறி இருவரையும் சிறை பிடித்தனர்.



மேலும் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரவுடிகளை போல வயதான நபரை வீட்டிலிருந்து வெளியேற்றி அடுப்பு முதல் அண்டா வரை சாலையில் வீசி இருவர் மீதும் பல்லடம் காவல்துறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் தொகைக்காண கால அவகாசமும் ஜப்தி போன்ற நடவடிக்கைக்கான முன் அறிவிப்புகளும் வீட்டின் முன்பு அறிவிப்பு ஓட்டுவதும் போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

இதை எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கந்து வட்டி போல் நடந்து கொண்ட இந்த கிளை இப்பகுதியில் பெரும் அவநம்பிக்கையை பெற்றுள்ளது. மேலும் வங்கியை இழுத்து சாத்திக்கொண்டு செல்லுங்கள் என்று அப்பகுதி பொதுமக்கள் வங்கி மேலாளர் மற்றும் துணை மேலாளரை அடிக்காத குறையாக மிரட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...