ஒரு வாரத்தில் குவாரிகளை அரசிடம் ஒப்படைப்போம்..! - கோவை ஆட்சியரிடம் குவாரி உரிமையாளர்கள் மனு!

கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல கோடி அபராதம் போடுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், குவாரிகளை அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை. அரசு இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தினர்.



கோவை: குவாரி மற்றும் கிரஷர் விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குவாரிகளை ஒருவாரத்தில் அரசிடம் ஒப்படைப்பதாக குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், கோவையை சேர்ந்த கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று, கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேசினர்.



சங்கத் தலைவர் சந்திர பிரகாஷ் நிர்வாகிகள் அம்மாசையப்பன், செல்வராஜ், நந்தகுமார், பழனிச்சாமி மற்றும் கிரஷர், குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.



அப்போது சங்க நிர்வாகிகள் தரப்பில், இதுவரை நடத்தப்பட்டு வரும் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு, கனிம வளம் மற்றும் புவியியல் துறை எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. மேலும், கோரிக்கைகளை பரிசீலிக்கவோ, தீர்வு காணவோ முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

குவாரி மற்றும் கிரசர்களில் பல ஆயிரம் டிப்பர் லாரிகள், ஜேசிபி, பொக்லைன் போன்ற வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

5 நாட்களில் மாநில அளவில் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் மோசமான சூழல் அதிகமாகிவிடும். உரிமம் பெறாத குவாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை உரிமம் பெற்ற குவாரிகள் மீதும் மேற்கொள்ளப்படுகிறது. குவாரிகளில் ஆய்வு செய்ய எந்தவித தடையும் இல்லை என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சந்திர பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு வாரத்தில் குவாரிகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழல் வந்து விடும். போராட்டம் நடத்தி காத்திருந்து தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல கோடி அபராதம் போடுகிறார்கள்.‌ திருச்சியில் குவாரி உரிமையாளர் பழனியாண்டி என்பவருக்கு 20 கோடி ருபாய் அபராதம் போடப்பட்டது.

கரூரில் 4 கல் குவாரிகளுக்கு 45 கோடி ரூபாய் அபராதம் போடப்பட்டது. ஒரு ஆட்டோக்காரருக்கு விதிமுறை மீறி விட்டார் என 50 லட்ச ரூபாய் அபராதம் போட்டால் அவர் எப்படி தொழில் செய்வார். குவாரி தொழிலில் இதுபோன்ற நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இப்படி இருந்தால் குவாரிகளை அரசிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை. அரசு இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...