கே.எப்.சி உரிமம் பெற்று தருவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் மோசடி - பீகாரை சேர்ந்த தந்தை, மகன் கைது!

கோவையை சேர்ந்த பெண்ணிடம் கே.எப்.சி நிறுவன கிளை உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் பணத்தை மோசடி செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தந்தை, மகனை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் மோசடி செய்த பீகாரை சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (22). பட்டதாரியான இவர் தனியாக தொழில் துவங்க ஆலோசனை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

அப்போது இணைய தளத்தில் தேடிய போது, கே.எப்.சி நிறுவனத்தின் பெயரில் கடை நடத்தும் உரிமம் பெற்றுதருவதாக கூறி இணையதளம் மூலம் விளம்பரம் வந்துள்ளது. இதனை உண்மை என எண்ணிய அவர், அந்த உரிமம் பெற முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் மூலமே வெரிபிகேசன் செய்யப்படும் எனவும், உரிமம் பெற தேவையான தொகையை ஆன்லைன் மூலம் கட்டினால் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை உண்மை என எண்ணிய பிரியதர்ஷினி ரூ.14 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் கே.எப்.சி நிறுவனம் நடத்த எந்த உரிமமும் வராததால், சந்தேகமடைந்த பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இணையத்தை கண்காணித்து வந்த போது, பீகார் மாநிலத்தில் இருந்தவாறு மோசடி அரங்கேறியது தெரியவந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்பிரவேஸ் பிரசாத், சுராஜ்குமார் என்பதும் இருவரும் தந்தை மகன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் குறித்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேறு மோசடி வழக்கில் இருவரும் சட்டீஸ்கர் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சட்டீஸ்கர் விரைந்த போலீசார் சிறையில் இருந்த இருவரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...