‘சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களும் நவீனப் பாடல்களே’ - கோவை புத்தக கண்காட்சியில் கவிஞர் இளம்பிறை உரை!

நவீனம் என்றால் வானத்தில் இருந்து குதித்த சொல்லாடல் இல்லை. மரபின் வேர்களைத் தாங்கி வருபவை. புதுமைகளைத் தாங்கி வருவது நவீனம். இந்த உத்தியைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி தான் எனக்கூறிய கவிஞர் இளம்பிறை, அவர் தான் நவீன வசனக் கவிதையைத் தொடங்கி வைத்தார் என்றும் தெரிவித்தார்


கோவை: நவீன வசனக் கவிதையை தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதியார் தான் என கோவை புத்தக கண்காட்சியில் கவிஞர் இளம்பிறை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஆகிய இணைந்து நடத்தும், “7-வது புத்தகத் திருவிழா – 2023”, கோவை - அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், ஐந்தாம் நாளான நேற்று (25.07.2023) நடைபெற்ற “நவீனக் கவிதையும் இசையும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில், கவிஞர் இளம்பிறை பேசியதாவது, நவீனம் என்றால் என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அனைத்துக் கலை வடிவங்களிலும் மாற்றங்கள் எற்பட்டன. இலக்கியத்தில் புதிய ஒளிக் கீற்றுகள் தோன்றின.

நவீனம் என்றால் ஏதோ வானத்தில் இருந்து குதித்த சொல்லாடல் இல்லை. மரபின் வேர்களைத் தாங்கி வருபவை. புதுமைகளைத் தாங்கி வருவது நவீனம். இந்த உத்தியைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி. நவீன வசனக் கவிதையைத் தொடங்கி வைத்தார். அதற்காக மரபை எதிர்க்கவில்லை.

இப்படியும் எழுதலாம் என்ற புதிய பாதையை வகுத்துக் கொடுத்தவர். புதிய கதவைத் திறந்து வைத்தவர். இதன் வழியாக வந்த கவிஞர்கள் ஏராளம். மிகப்பெரிய சுதந்திரம் நவீனக் கவிதைகளில் இருந்தன.

நவீனத்தை காலம், கருத்தை அடிப்படையாக கொண்டு பார்க்க வேண்டும். சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களை நவீனமாகவே பார்க்கிறேன். இன்றும் சங்க இலக்கியங்களைப் பேசுகிறோம் என்றால், அதன் நீட்சி இன்றளவும் தொடர்கிறது.

நவீனம் என்பது ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகளில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அதை நாட்டுப்புறப் பாடல்களிலும் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்ந்து திரைப்படக் கலைஞர் ரவி சுப்பிரமணியம் நவீனக் கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடினார். இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் வி.திருஞானம், கோவை புத்தகக் கண்காட்சித் தலைவர் கே.ரமேஷ் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...