பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்தப்பா மீது 14 வயது சிறுமி புகார் - மறுத்து வெளியிட்ட சிறுமியின் வீடியோவால் பரபரப்பு!

இடையர்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு, சிறுமியின் சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் வற்புறுத்தியதால் தான் சித்தப்பா மீது புகார் அளித்ததாகவும், அது உண்மையில்லை என சிறுமி பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், புகார் உண்மையில்லை என சிறுமி கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி சின்ன தடாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து இரண்டு பெண் குழந்தைகளையும் தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்று விட்டார். சிறுமியின் தந்தை மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவி மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் சித்தப்பா திருஞானம் மற்றும் அவரது குடும்பத்தார் பராமரிப்பில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார விடுமுறைக்காக மாணவி தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு தாய் தந்தையின் பிரிவு காரணமாக திடீரென மாணவி சாணி பவுடரை குடித்து வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரது குடும்பத்தார் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது பற்றி தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியின் சித்தப்பா திருஞானம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா விடுமுறை சமயத்தில் மாணவியின் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டதாகவும் தற்போது விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் தொந்தரவு செய்ததால் சாணி பவுடர் குடித்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சித்தப்பா திருஞானம் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று காலை சிறுமியின் சித்தப்பாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்த போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதாக கூறினர். இதை கேட்டு அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் மருத்துவமனையில் சாணி பவுடர் குடித்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து திருஞாத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த சிறுமி துடியலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் மாணவி கூறியிருப்பதாவது,



தன்னுடன் அப்பா அம்மா இல்லை என்றும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். மேலும் மருத்துவமனையில் விசாரணைக்கு வந்த போலீசார் தன்னிடம் தனது அம்மாவின் தங்கையின் கணவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறுமாறு போலீசார் வற்புறுத்தியதாக கூறியுள்ளார். 

மேலும் தனது சித்தியின் கணவர் எந்தவித பாலியல் துன்புறுத்தலும் தன்னை செய்யவில்லை என்று கூறும் அச்சிறுமி தனது சித்தப்பாவை போலீசாரிடமிருந்து காப்பாற்ற யாராவது வாருங்கள் என்று கூறுவது தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் தனிக்குழு போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் தாத்தா பாட்டி பொறுப்பில் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் சிறுமி வேறு காரணத்திற்காக தற்கொலை செய்ய முயன்று சாணி பவுடரை குடித்த சம்பவத்தை திசை திருப்பி சிறுமியின் சித்தப்பா மீது போக்ஸோ வழக்கு போலீசார் பதிவு செய்திருப்பதும், தனது சித்தப்பாவை யாராவது காப்பாற்றுங்கள் என்று பாதிக்கப்பட்டதாக போலீசாரால் கூறப்படும் மாணவி பேசும் வீடியோவும் வெளியாகி இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது, மாணவி அளித்த வாக்கு மூலத்தின் படியே வழக்கு பதியப்பட்டதாகவும், தற்போது அச்சிறுமியை மிரட்டி அவ்வாறு பேச வைத்து வீடியோ எடுத்து பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவைப் பார்த்தாலே தெரியும் சொல்லிக் கொடுத்து சொல்ல வைத்துள்ளது. 

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...