ஜவுளித் தொழிலின் கட்டமைப்பு சிக்கல்கள் தீர்க்கப்படும் - தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க புதிய நிர்வாகிகள் உறுதி

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்த நிர்வாகிகள் பல மாற்று திட்டங்களை அறிவித்தனர்.



கோவை: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், டாக்டர்.எஸ்.கே.சுந்தரராமன், துணைத் தலைவர், துரை. பழனிசாமி, உபதலைவர், எஸ்.கிருஷ்ணகுமார் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது கூறுகையில், "ஜவுளித் தொழில் சந்திக்கும் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்கவும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும் சைமா பாடுபடும் என்று தெரிவித்தனர்.

2023-24 வருடத்திற்கு, சைமாவின் துணைத்தலைவராக, ஈரோட்டில் செயல்படும், பல்லவா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர், ததுரை பழனிசாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துரை பழனிசாமி அமெரிக்காவில் உள்ள ஸதர்ன் நியு ஹெம்ஷையர் பல்கலை கழகத்திலிருந்து பன்னாட்டு வர்த்தகத்தில் முதுநிலை மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். மேலும், ஜவுளித் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டத்தை கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இருந்து பெற்றுள்ளார். மேலும், இந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு கிளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். அவர் சிந்தட்டிக் அண்டு ரேயான் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சிலின் (SRTEPC) நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார்.

2023-24 வருடத்திற்கு, சைமாவின் உப தலைவராக, திருப்பூரில் செயல்படும், சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர், திரு.எஸ்.கிருஷ்ணகுமார் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் பி.ஏ.(உளவியல்) பட்டம் பெற்றவர்.

இவர் 1980களின் பிற்பகுதியில் வணிகத்தில் நுழைந்த இவர், சமூகத்திற்கு உதவும் பல்வேறு சி.எஸ்.ஆர். நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, அவரது அமைப்பு திருப்பூரில் 1.5 மில்லியன் மரங்களை நட்டுள்ளது. மேலும், அவரது ஆலை வளாகத்திலேயே 30 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார்.



இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் தொழில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக 110 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து, 30 ஆயிரம் க கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வருவாய் மற்றும் 44 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலவாணி வருவாய் ஈட்டும் தொழில்.

பல்வேறு வெளிப்புற காரணிகளை தவிர்த்து சமீப காலமாக பன்னாட்டு விலையில் மூலப்பொருட்களை பெறுவது, இறக்குமதி வரி, அதிக உற்பத்தி செலவு, குறைந்த உற்பத்தித் திறன், அதிக போக்குவரத்து செலவு, மூலதனச் செலவு போன்ற கட்டமைப்பு சிக்கல்களை சந்தித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் உலகளாவிய போட்டித்தன்னையை மேம்படுத்துவதற்கு உத்வேகத்தை அளித்து பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. இருப்பினும், சில குறிப்பிட்ட கொள்கை குறைபாடுகள் மற்றும் மூலப்பொருள் தளத்தை வலுப்படுத்துவதில் தாமதம், அரசு நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவதில் தாமதம் ஆகியவை தொழில்துறை நீடித்த வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கு தடையாக இருந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பல்வேறு மாநில அரசுகள் அளித்துள்ள அதீத சலுகைகள் காரணமாக தொழில்துறையின் நீண்ட காலத் தேவைகள் மற்றும் வாய்ப்புகளைப் கணிக்காமல் தொழிற்துறையினர் உற்பத்தித் திறனை கூட்டி வருகின்றனர். பல்வேறு மாநிலங்கள் அதிக சலுகைகளை வழங்கினாலும், உறுதியான பலன்களை சரியான நேரத்தில் வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. இது போன்ற கொள்கைகளின் கீழ் செய்யப்படும் புதிய முதலீடுகளுக்கு பல நிதி நெருக்கடிகள் ஏற்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், ஜவுளி வர்த்தகத்தில் சீனாவால் விடப்பட்டுள்ள இடத்தைப் பிடிக்க மட்டுமல்லாமல், நீடித்த வளர்ச்சி விகிதத்தை எட்டுவதற்கும் நீண்ட காலப் பார்வையுடன் முழுமையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது இன்றியமையாததாகி விட்டது" என தெரிவித்தனர்.

சைமா தலைவர், டாக்டர்.சுந்தரராமன் கூறுகையில், 

"சர்வதேச பருத்தி விலையை விட 5 முதல் 10 சதவீதம் வரை குறைவான விலையில் உள்நாட்டில் பருத்தி கிடைப்பதை சாதகமாக பயன்படுத்தி பருத்தி மற்றும் அதன் ஜவுளிப் பொருட்களில் தொழில்துறையினர் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், இந்திய பருத்தி சந்தையில் பன்னாட்டு பருத்தி வியாபாரிகளின் ஆதிக்கம், 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் MCX பருத்தி வர்த்தக தளத்தில் நடத்தப்படும் ஊக வணிகம் ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டு பருத்தியினால் ஏற்பட்ட சாதகபலனை ஜவுளித்துறையினர் இழந்துள்ளனர். செயற்கை பஞ்சு மற்றும் நூல் உற்பத்தியாளர்கள் 23 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ள குவிப்பு வரியினால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர்.

அனைத்து மூலப் பொருட்கள் மீதும், குறிப்பாக பாலியஸ்டர் பஞ்சு மற்றும் விஸ்கோஸ் பஞ்சு போன்ற செயற்கை பஞ்சுளின் மீதான குவிப்பு வரிகளை நீக்குவதில் பிரதமர் எடுத்த துணிச்சலான முயற்சிகள் மிகவும் பாராட்ட பட வேண்டும்.

இருப்பினும், புதிய தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் காரணமாக செயற்கை இழைகள் மற்றும் இழை நூல்களின் சீரான விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பெரும்பாலான மூலப்பொருட்களின் விநியோகஸ்தர்களை இந்திய தரநிலை பணியகம் கருத்தில் கொள்ளவில்லை. மேற்படி பொருட்களை அட்வான்ஸ் ஆதரைசேஷன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை பஞ்சு மதிப்புச் சங்கிலி சில கடமைகளின் அடிப்படையில் அதன் பரிந்துரைக்கப்பட்ட வணிகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களில் வரியில்லாச் சலுகையைப் பெற்று அதிக அளவிலான முதலீடுகளைச் செய்திருப்பதால், EPCG -ன் கீழ் அவர்களுக்கு மிகப் பெரிய ஏற்றுமதி கடமைகளும் உள்ளன. அட்வான்ஸ் ஆதரைசேஷன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கோஸ் பஞ்சு மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து சிறப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை இழைகள் மற்றும் இழை நூல்களுக்கு உடனடியாக விலக்கு அளிக்குமாறு ஜவுளித்துறை அமைச்சரை வலியுறுத்திகிறோம்

உள்நாட்டு செயற்கை பஞ்சு உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை சர்வதேச விலையில் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

ஜவுளித்துறையின் வளர்ச்சி இயந்திரங்களான செயற்கை பஞ்சு மதிப்பு சங்கிலி மற்றும் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே வணிக அளவு மற்றும் ஏற்றுமதியில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை அடைய முடியும். பிறநாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த செய்யும் முயற்சிகளில் உள்ள முன்னேற்றத்தை மிகவும் பாராட்ட பட வேண்டியது. மேலும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்பட்சத்தில், மூலப்பொருட்கள் பெறுவதில் உள்ள கட்டமைப்பு சிக்கல்கள் தீர்க்கப்பட்டு ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உதவும். 

பணிமுறை அணுகுமுறை மற்றும் கணிசமான நிதியுடன் பருத்தி தொழில்நுட்ப இயக்கம் 2.0-வை விரைவில் அரசு அறிவிக்க வேண்டும். ஏழு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளும், ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள 35 மில்லியனுக்கும் அதிகமான மக்களும் சர்வதேச அளவில் போட்டி விகிதத்தில் தரமான பருத்தி கிடைப்பதை நேரடியாக நம்பியிருப்பதால், பருத்தி தொழில்நுட்பம் இன்றியமையாததாகிவிட்டது . இந்திய சராசரி பருத்தி உற்பத்தி ஹெக்டேருக்கு சுமார் 430 கிலோ மட்டுமே என்றும், 20க்கும் மேற்பட்ட பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகள், ஹெக்டேருக்கு 1500 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்கின்றன. 

மத்திய ஜவுளித்துறை அமைச்சரின் தலையீட்டில் ரூ.44.2 கோடி பட்ஜெட்டில் மத்திய வேளாண் அமைச்சகம் தொடங்கியுள்ள முன்னோடித் திட்டத்தைப் பாராட்டுக்குரியது. 

நவீன விதைத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வது அவசரம். வேளாண்மையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுங்கள், அவ்வாறு செய்தால், விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு அதிகரிக்கும் மற்றும் பருத்தி ஜவுளி உற்பத்தியில் நாடு ஆதிக்கம் செலுத்தும். குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கனவே சர்வதேச விலையை விட அதிகமாக உள்ளது என்றும் குறைந்தபட்ச விலையின் அதிகரிப்பு அரசுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் எனவே, பருத்தி விவசாயிகளின் வருவாயை ஈடு செய்ய குறைந்தபட்ச விலை சரியான தீர்வல்ல. மாசில்லா பருத்தி, கரிம பருத்தி, நிலையான பருத்தி மற்றும் கூடுதல் நீளமான பருத்தி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பருத்தி வகைகளின் உற்பத்தியை மேம்படுத்துவது மட்டுமே விவசாயிகளுக்கு அதிக வருவாயை ஈட்டித்தரும். அமெரிக்க PIMA , எகிப்தின் GIZA பருத்தியில் சுமார் 45 சதவீதத்தை இந்தியா நுகர்வதாகவும் அதன் மூலம் உலக சந்தையில் அதன் சந்தைப் பங்கை நிலைநிறுத்தி உள்ளது" இவ்வாறு டாக்டர்.சுந்தரராமன் கூறினார்

மேலும் பேசிய சைமா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சுந்தர ராமன், இந்த பருத்தியை அட்வான்ஸ் ஆதரைசேஷன் திட்டத்தின் கீழ் வரியின்றி இறக்குமதி செய்ய முடியும் என்றாலும், மதிப்புச் சங்கிலியில் உள்ள உற்பத்தியாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு, குறு மற்றும் நடுத்தர வகைகளை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் மேற்படி திட்டத்தின் பலனைப் பெற முடியாது என்றும் அவர் விளக்கினார்

இவ்வகையான சிறப்பு பருத்தி வகைகள் வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் வரியில்லாமல் செய்யப்பட்டு வரும் மதிப்புக் கூட்டப்பட்ட ஆடை இறக்குமதியுடன் போட்டியிட முடியாத உள்நாட்டுச் சந்தைக்கு 40 சதவீதத்திற்கும் அதிகமான சிறப்பு பருத்திகள் உதவுகின்றன என்று அவர் கூறினார்.

எனவே, நடப்பு ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் இந்த பருத்திக்கு தனி HSN குறியீடு வழங்கப்பட்டுள்ளதால் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத கூடுதல் நீண்ட இழை பருத்திக்கு அல்லது குறைந்தபட்சம் அமெரிக்க PIMA மற்றும் எகிப்தின் GIZA பருத்திகளுக்காவது 11 சதவீத இறக்குமதி வரியிலிருந்து உடனடியாக விலக்களிக்குமாறு அரசை வலியுறுத்தினார். 

மார்ச் மாத இறுதிக்குள் 90 சதவீத பருத்தி, விவசாயிகளால் விற்கப்படுவதால், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை அனைத்து பருத்தி வகைகளுக்கும் விலக்களிக்க வேண்டும் என்றும் அவர் அரசை கேட்டுக் கொண்டார். 

இது வர்த்தகத்தில் பின்பற்றப்படும் இறக்குமதி சம விலை உத்திகளைத் கட்டுப்படுத்தி, உலகாளவிய போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஜவுளித்துறையினர் தங்கள் தயாரிப்பு மேம்பாட்டு திறனை வலுப்படுத்துவதன் மூலம், மதிப்பு கூட்டல், புதுமை மற்றும் முக்கிய தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சைமா தலைவர் வலியுறுத்தினார். தொழில்நுட்ப ஜவுளிகள், PM MITRA பூங்கா மற்றும் PLI திட்டங்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் வசதிகளை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். தொழில்நுட்ப ஜவுளி, சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை உற்பத்தி செய்வது மற்றும் ஜவுளி மூலப்பொருள் வசதிகள் ஆகியவற்றுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஜவுளிக் கொள்கையை தமிழக அரசு வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டிய டாக்டர்.சுந்தரராமன், மின்சாரம் மற்றும் தொழிலாளர் கொள்கைகளில், குறிப்பாக காற்றாலைகளுக்கான வருடாந்திர வைப்பு வசதியை தொடர்வது போன்றவற்றில் தற்போதைய நிலையை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக காற்றாலைகள், மேற்கூரை சூரிய மின்சக்திக்கான நெட் ஒர்க் கட்டணங்களை நீக்கி, HT ஆலைகளுக்கான அதிகபட்ச தேவைக் கட்டணத்தை ரூ.562ல் இருந்து ரூ.450 ஆகக் குறைத்து, அதிகபட்ச கேட்பு கட்டணங்கள் மற்றும் பீக் ஹவர் ஆகியவற்றை LT மற்றும் LTCT ஆலைகளுக்கு திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை சைமா தலைவர் கேட்டுக் கொண்டார். 

ஜவுளி ஆலைகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களையே சார்ந்திருப்பதால், தற்போதைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், சம நிலைபாட்டை உறுதிப்படுத்தவும் முதலமைச்சருக்கு டாக்டர் சுந்தரராமன் வேண்டுகோள் விடுத்தார் நிலையான இலக்குகளை அடைவதற்கு பெரும் உந்துதலை வழங்குமாறு தொழில்துறையிருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு சைமாவில் உருவாக்கப்பட்டுள்ள Sustainability Cell -ஐ தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். போக்குவரத்து செலவு மற்றும் புதைபடிவ எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பதற்கும், அதன் மூலம் கார்பன் தடயத்தை குறைப்பதற்கும், கப்பல் போக்குவரத்தை பயன்படுத்துமாறு தொழில்துறையினரை அவர் வலியுறுத்தினார். இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம், இந்தியன் ரயில்வே மற்றும் முக்கிய துறைமுக அதிகாரிகளுடன் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் கொச்சி போன்றவர்களுடன் சைமா தனது உரையாடலை தொடரும் என்றும் ஜவுளிப் பொருட்களை குறைந்த செலவில் கொண்டு செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றும் சைமா தலைவர் கூறினார. 

இளம் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்காக “New Gen” மேலாண்மை மேம்பாட்டு திட்டத்தை, சைமா வழங்க உள்ளதாகவும், இது தொடர்பான திட்டத்தை சைமா விரைவில் அறிவிக்கும் என்றும் புதிதாக பொறுப்பேற்ற சைமாவின் தலைவர் டாக்டர். சுந்தர ராமன் கூறினார்.

முன்னதாக, சைமாவின் 64ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2023-24 வருடத்திற்கு, சைமாவின் தலைவராக, கோவையில் செயல்படும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன்; ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர். சுந்தரராமன் மருத்துவம் படித்தவர். மேலும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இருந்து எம்.பி.ஏ. முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் அவர் தொழில்நுட்ப ஜவுளிதுறையிலும் தொழில்நுட்ப கல்வியிலும் அனைவராலும் அறியப்பட்டவர். மேலும், அவர் ; Firebird Institute of Research in Management என்ற நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலராகவும் செயல்படுகிறார். தேசிய அளவில், டாக்டர் சுந்தரராமன் பல்வேறு வர்த்தக அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். அவர் கோவை இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், இந்திய தொழில்நுட்ப ஜவுளி சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...