உடுமலையில் ஏழு நாட்கள் நடைபெற்ற சர்வதேச விண்வெளி வார விழா நிறைவு

உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பில், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லூரி இணைந்து ஏழு நாட்கள் நடைபெற்ற சர்வதேச விண்வெளி வார விழா நிறைவு பெற்றது.


திருப்பூர்: பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொலைநோக்கி, மாணவர்கள் தாங்களாகவே செய்து கற்றுக் கொள்ளக்கூடிய அறிவியல் உபகரணங்கள், சூரியக் கடிகாரம், அறிவியல் சார் புத்தகங்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.



அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம், உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பில், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லூரி இணைந்து ஏழு நாட்கள் தொடர்ச்சியாக இணையவழி கருத்தரங்குகள், இரவு வான் நோக்கும் நிகழ்ச்சி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் சார் வானவியல் பயிற்சி பட்டறை, இணையவழி வினாடி வினா, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்வுகள் தொடர்ச்சியாக சிறப்பாக நடத்தப்பட்டது.

பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையையும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி துறை சார்ந்த ஆர்வத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார் திறனறிப் போட்டிகள் சர்வதேச விண்வெளி வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது.



அதில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாகவும், இணைய வழியிலும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும், நிறைவு விழாவும் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு வருகை தந்தவர்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் வரவேற்றுப் பேசினார். அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். விவேகானந்தா வித்யாலயம் பள்ளி தாளாளர் மூர்த்தி, உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மணி, செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக இஸ்ரோ, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குனரும் விஞ்ஞானியுமான முனைவர். இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடம் அறிவியல்சார் துறைகளில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது, பள்ளி படிப்பில் இருந்தே எவ்வாறு உங்களுடைய சிந்தனைகளை விண்வெளி துறையிலும் அறிவியல் சார்ந்த துறையிலும் இணைத்துக்கொண்டு உங்களை மேம்படுத்திக் கொள்வது என்பது பற்றி கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து பெங்களூரு இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்பிரமணி அவர்கள் செயற்கைக்கோள்களை எவ்வாறு வீட்டில் இருந்தே கண்காணிப்பது, அவற்றின் சிக்னல்களை எவ்வாறு வீட்டில் இருந்தபடியே நீங்களே பெறுவது, அதற்கு எது மாதிரியான எளிய உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நிகழ்வில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க பட்டய தலைவர் சக்கரபாணி, தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொலைநோக்கி, மாணவர்கள் தாங்களாகவே செய்து கற்றுக் கொள்ளக்கூடிய அறிவியல் உபகரணங்கள், சூரியக் கடிகாரம், அறிவியல் சார் புத்தகங்கள் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டது.



கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக கல்லூரியின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதா மணி நன்றி கூறினார் விழாவுக்கான ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள் சதீஷ்குமார், மது ஶ்ரீ, ஹரிணி, பேராசிரியர் கண்டிமுத்து ஆகியோர் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...