உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டில் திருட்டு - கைது செய்து பொருட்கள் பறிமுதல்

தீபாவளி விடுமுறைக்கு வருவாய் கோட்டாட்சியர் வெளியூர் சென்ற போது திருட்டு நடைபெற்றது. திருட்டுக்கு பயன்படுத்திய ஜேசிபி வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் இல்லத்தில் திருடியவரை கைது செய்து அவரிடம் இருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பபட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ வாக இருப்பவர் ஜஸ்வந்த் கண்ணன். இவருக்கு அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு பள்ளபாளையம் அருகே மடத்தூர் பிரிவில் அமைந்து உள்ளது. அதில் தங்கி இருந்து ஜஸ்வந்த் கண்ணன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி குடியிருப்பை பூட்டிவிட்டு சொந்த ஊரான பரமத்தி வேலூருக்கு ஜஸ்வந்த் கண்ணன் சென்று விட்டார்.

பின்னர் 14 ம் தேதி பணிக்கு திரும்பிய அவர் அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், மடிக்கணிணி, செல்போன் உள்ளிட்ட 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பழனி தாலுக்கா ஆண்டிபட்டியை சேர்ந்தவரும் தற்போது போடிபட்டி காமராஜ் நகரில் வசித்து வருபவருமான கார்த்தி(30) என்பவர் ஆர்.டி.ஓ வீட்டில் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. ஜேசிபி டிரைவரான இவர் திருடப்பட்ட பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.



அதைத் தொடர்ந்து பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.



மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய ஜேசிபி வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...