குண்டடம் அருகே மக்காச்சோள பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள் - விவசாயிகள் வேதனை

ஒட்டபாளையம், கள்ளிவலசு, மருதூர், பெல்லம்பட்டி, நவநாரி, பெரியகுமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூா் மாவட்டம் குண்டடம் பகுதியில் ஆவணி, புரட்டாசி பட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை கதிர்விட்டு பால்புடை பருவத்தில் உள்ளது.

அடுத்த ஒரு மாதத்தில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த நிலையில் குண்டடம் அருகே உப்பாறு அணை மற்றும் உப்பாறு ஓடை பகுதிகளான ஒட்டபாளையம், கள்ளிவலசு, மருதூர், பெல்லம்பட்டி, நவநாரி, பெரியகுமாரபாளையம், கள்ளிப்பாளையம், முத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்காச்சோள வயல்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து துவம்சம் செய்து வருகின்றன.

குறிப்பாக இரவு நேரங்களில் வயல்களில் புகும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள தட்டுகளை கீழே தள்ளி கதிர்களை சாப்பிட்டு விடுகின்றன. தட்டுகள் கீழே சாய்ந்து அதன் மீது பன்றிகள் நடப்பதால் அந்த மக்காச்சோள தட்டுகள் மாடுகள் தின்பதற்கு கூட லாயக்கில்லாமல் போய்விடுகிறது. மகசூலும் கணிசமாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை செய்து வருவதால் மக்காச்சோள பயிர்கள் கதிர்விடும் தருணத்தில் வயலைச்சுற்றிலும் கம்பிகளைக்கட்டியும், ஆங்காங்கே சேலை, வேட்டிகள், வெள்ளைச்சாக்குகளை கட்டித்தொங்க விட்டுள்ளனர். இருப்பினும் பன்றிகள் வயல்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது, மழை சீசனுக்கு ஏற்ற பயிராக மக்காச்சோளம் உள்ளதால் வருடம்தோறும் இந்தசீசனில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப்பன்றிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இரவு நேரங்களில் அவ்வப்போது பட்டாசுகளை வெடித்தும், கம்பிகளை கட்டியும் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் அடிக்கடி வயலுக்குள் வந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த வருடம் இதுபோலவே காட்டுப்பன்றியால் பயிர்கள் சேதமான தகவலறிந்து வனத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

ஆனாலும் இதுவரை எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. எங்களுக்கு நிவாரணத்தை விட காட்டுப்பன்றிகளை முழுமையாக பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...