தாராபுரம் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மின் பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு..!

வேலை செய்யக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தும் தொடர்ச்சியாக வேலை செய்து வரும் தனியார் மின் பாதை நிர்வாகத்தை கண்டித்து நீர் நிலையில் இறங்கி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கன்னாங்கோவில் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் கடுமையான வறட்சியின் காரணமாக தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இந்நிலையில், தனியார் சூரிய ஒளி மின் சக்தி மின் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின் பாதை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் பாதையை சாலை ஓரங்களிலும் நீர் நிலைகளிலும் அமைக்க கூடாது என வலியுறுத்தி குண்டடம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

அப்போது, தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் குண்டடம் காவல் ஆய்வாளர் ஆகியோர் மனுவை பெற்றுக் கொள்ளாமல் காலம் தாழ்த்தினர். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, வருகின்ற ஆறு நாட்களுக்கு பணியை தனியார் மின் பாதை நிறுவனத்தினர் நிறுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.



இதனிடையே, கன்னங்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பியபோது, கனரக வாகனங்களை வைத்து மின்பாதை அமைக்கும் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை முடிவதற்குள் மூன்று புதிய மின் கம்பங்களை நீர் நிலைகளின் அருகிலேயே நட்டுச் சென்றனர். அதை தொடர்ந்து சாலை ஓரத்தில் மின் பாதையில் மின்கம்பங்கள் நடுவதற்கு உண்டான முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கிராம மக்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் வேலையாட்களை முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், 6 நாட்களுக்கு வேலை செய்யக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தும் தொடர்ச்சியாக வேலை செய்து வரும் தனியார் மின் பாதை நிர்வாகத்தை கண்டித்து நீர் நிலையில் இறங்கி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், தற்போது கண்ணாங் கோவில் கிராமத்தில் அனுமதி இல்லாமல் நீர்நிலைகள் மற்றும் சாலை ஓரங்களில் தனியார் மின் பாதை நிறுவனத்தினர் மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பொதுமக்களையும் எதிர்ப்பையும் மீறி மின்கம்பம் அமைத்து வருகின்றனர் மேலும் மின் பாதை அமைக்கும் பணி நிறுத்தவில்லை என்றால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...