உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ரூ.99 லட்சத்து 20 ஆயிரத்துக்கு ஏலம் போனது குட்டை திடல்

கடும் போட்டிக்கு பின்பு சேலத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் ரூ.99 லட்சத்து 20 ஆயிரத்திற்கு குட்டை திடலை ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.27 லட்சத்து 26 ஆயிரத்துக்கு கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 9 ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கி உள்ளது. திருவிழாவை பொதுமக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் குட்டை திடலில் ஆண்டு தோறும் பொழுது போக்கு உபகரணங்கள் அமைப்பது வழக்கமான நிகழ்வாகும்.

இதற்காக வருவாய் துறை சார்பில் ஏலமும் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 12-ம் தேதி இந்த ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் ஏலம் மாறுதல் செய்யப்பட்டு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதில் அரசு நிர்ணயித்து உள்ள குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.71 லட்சத்து 94 ஆயிரத்தில் ¼ பங்கு அச்சாரத் தொகை ரூ.17 லட்சத்து 98 ஆயிரத்து 500 ஐ 4 மணிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து 8 நபர்கள் தொகையை செலுத்தி பதிவு செய்தனர். இதையடுத்து உடுமலை தாசில்தார் ப.சுந்தரம் தலைமையில் 4 மணிக்கு ஏலம் தொடங்கியது. முன்னதாக பங்கு கொண்ட நபர்களுக்கு ஏல நிபந்தனைகள் அடக்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

அப்போது தனியார் கடைகள் அமைத்து ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அதை மீட்டு தர வேண்டும், விளையாட்டுக்கள் நடத்துவதற்கு லைசன்ஸ் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை நீக்கி தர வேண்டும், குட்டைத்திடலை முழுமையாக தூய்மைப்படுத்தி தர வேண்டும் என ஏலதாரர்கள் தெரிவித்தனர்.

இதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து ஏலம் தொடங்கியது. ஆரம்பத் தொகையான ரூ.71 லட்சத்து 94 ஆயிரத்தில் இருந்து ஏலம் தொடங்கியது. படிப்படியாக தொகையை உயர்த்தி ஏலதாரர்கள் ஏலம் கோரி வந்தனர்.



கடும் போட்டிக்கு பின்பு சேலத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் ரூ.99 லட்சத்து 20 ஆயிரத்திற்கு குட்டை திடலை ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு ரூ.27 லட்சத்து 26 ஆயிரத்துக்கு கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏலத் தொகையை 24 மணி நேரத்திற்குள் இணையவழிச்சலான் மூலம் செலுத்திட ஏலதாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வின் போது தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேந்திர பூபதி, மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி கருப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் குட்டை திடலில் ஏலத்தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கட்டணத் தொகையை ஏலதாரர்கள் உயர்த்திக் கொள்வதால் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது. எனவே குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்வதுடன் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...