கலிக்கநாயக்கன்பாளையம் மக்கள் தொடர்பு முகாமில் 381 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்

பேரூர் வட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 384 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.



கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமம் மணி திருமண மண்டபத்தில் இன்று (12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 381 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.



இம்முகாமில் தாளியூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, தென்கரை பேரூராட்சி தலைவர் மகாலெட்சுமி பிரசாந்த், தாளியூர் பேரூராட்சி துணைத் தலைவர் மலர்விழி பிரபு, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) பண்டரிநாதன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், வட்டாட்சியர் இரா.ஜோதிபாசு, மண்டல துணை வட்டாட்சியர் ம.கோகிலா, அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் மூலம் ஒவ்வொரு வட்டத்தில் உள்ள கிராமத்தை தேர்வு செய்து, அந்த ஊரில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து மனுக்களாக பெற்று, அதன்அடிப்படையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று ஜூன்.12 பேரூர் வட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இம்முகாமிற்கு ஏற்கனவே மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 384 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகின்றது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு தாலுகா தேர்ந்ததெடுக்கப்பட்டு, அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் தங்கியிருந்து, அங்குள்ள மருத்துவமனை, அங்கன்வாடி மையம், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதுடன் அப்பகுதிகளில் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளது, அவற்றிற்கு எவ்வாறு தீர்வு காணுவது என்பது குறித் நேரடியாக ஆய்வுசெய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வரின் முகவரி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்ட செயலியில் பெறப்படும் மனுக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை இச்செயலி மூலம் அறிந்துகொள்ளலாம். எனவே, பொதுமக்கள் மனுக்கள் வழங்கும் போது கட்டாயமாக கைப்பேசி எண்ணை எழுதவேண்டும். அதில் ஒரு சில மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகலாம்.

உதாரணமாக, இலவச வீடு, இலவச பட்டா போன்ற கோரிக்கை மனுக்களை ஆய்வு செய்து, அங்குள்ள இடம் மற்றும் நிதியினை பொருத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய சூழ்நிலையில் தாலுகா அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார்செய்யப்பட்டு, அதற்கென தனியாக பதிவேடுகள் பராமரிக்கப்படும். அந்தபதிவு மூப்பு பட்டியலின்படி, இலவச வீடு, இலவச பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஒரு புதிய திட்டமான நீங்கள் நலமா என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

ஒவ்வொரு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் குறித்து 10 பயனாளிகளை தொடர்பு கொண்டு, அவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளார்களா? எவ்வாறு அத்திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து அந்த துறை அலுவலர்களை கேட்கும் மிகச்சிறப்பான திட்டமாகும். இதுபோன்று பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் அனைத்து அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதுடன், தகுதியான திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு நேரடியாக தேடி சென்று இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றது. பள்ளி வேலைநாட்களில் தினந்தோறும் குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும். காலை உணவுத் திட்டம் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. காலையில் குழந்தைகள் உணவை உண்பதால் அவர்களால், கவனமுடன் பாடங்களை படிக்கமுடிகின்றது. பள்ளிப்படிப்பு முடித்தவுடன் உயர்கல்வி பயில்வதற்கு அவர்களை கல்லூரிக்கு அனுப்ப வேண்டும். 

அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகின்றது. மேலும் கல்லூரி படிப்பை படிக்க முடியாத மாணக்கர்கள், ஐடிஐ, டிப்ளமோ படிப்பையாவது கட்டாயம் படிக்கவேண்டும். நம் மாவட்டத்தில் அரசு ஐடிஐ கல்லூரிகள் அதிகமாக இருக்கின்றன. படித்தமுடித்தவுடன் வேலை என்பது உறுதியாக கிடைக்கின்றது. 

அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இங்கு தேவையான பயிற்சிகளும், தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். தனியார் துறை வேலைவாய்ப்பு முயற்சி செய்கிறவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பினை பெறலாம். அரசின் சார்பில் இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

பொதுமக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்த அழகான இடமாகும். இயற்கை அழகை காப்பற்ற வேண்டுமானால் மாசுப்படுத்தாமல் வைத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் உபயோகிக்கப்பதை தவிர்க்கவேண்டும். பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம்பிரித்து வீடுகளிலிருந்து சேகரித்து, திடக்கழிவு மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்ளவேண்டும். வருங்காலத்தில் இங்கு சுற்றலா பயணிகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அதற்கு மாசு இல்லாமல் இப்பகுதியின் இயற்கை எழிலை பாதுகாக்கவேண்டும். என கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார். 

இம்முகாமில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மலைபயிர்கள் துறையின் சார்பில் 07 பயனாளிகளுக்கு ரூ.7.95 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.21.75 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.20000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளும், 25 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் சாலை விபத்து நிவாரணத் தொகையும், 9 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், நகரர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 102 பயனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் வீடு ஒதுக்கீட்டு ஆணைகளையும், 68 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் இ-பட்டாக்களையும், 20 ப யனாளிகளுக்கு உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல், 3 பயனாளிகளுக்கு சாதிச் சான்றிதழ்கள், 17 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளும் என மொத்தம் 384 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார். 



தொடர்ந்து, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் ஒன்றியம், தென்னமநல்லூர் ஊராட்சியில் ரூ.5.58 இலட்சம் மதிப்பில் புதுக்குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டுவைத்தார். 



இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்வேதா சுமன், தென்னமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுசாமி, துணைத் தலைவர் மலர் கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கலாராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...