தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் இந்த ஆண்டு புதிய பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்புகள் வேளாண்மை துறையில் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளன.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பட்டயப் படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. இவ்வியக்ககத்தின் வாயிலாக பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர பட்டயப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள், காளான் வளர்ப்பு, மூலிகைப் பயிர்கள், தோட்டக்கலைப்பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் மற்றும் பயிர்பெருக்க முறைகள், நவீன கரும்பு சாகுபடித் தொழில்நுட்பங்கள், திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு, அலங்காரத் தோட்டம் அமைத்தல் ஆகிய பாடங்கள் கற்போர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

நேரடி பயிற்சி வகுப்புகளுக்கு வர இயலாதவர்களுக்காகவே அலங்காரத் தோட்டம் அமைத்தல், மூலிகை மற்றும் நறுமணப் பயிர் உற்பத்தி, மண்புழு உரம் தயாரித்தல், வீடு மற்றும் மாடித்தோட்டம் அமைத்தல், வீட்டுத்தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை அங்கக வேளாண்மைக்கான இடுபொருள்கள் போன்ற பாடங்களை நாட்டில் எங்கிருந்தும் கற்றுக்கொள்ளும் வகையில் இணையவழியில் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

"வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு" என்ற பட்டயப் படிப்பானது உரம், விதை, பூச்சி மருந்து விற்பனையாளர்கள் உரிமம் பெறுவதற்கான பட்டயப்படிப்பு ஆகும். இப்பட்டயப்படிப்பானது 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இன்று முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் (Protected Cultivation), ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) முறையில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணையவழி தொழில்நுட்பங்கள் (Smart Farming) மற்றும் வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் (Drone Technology) போன்ற புதிய பட்டயப்படிப்பு பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி கூறியதாவது,



"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் வழங்கப்பட்ட சான்றிதழ் படிப்புகளின் மூலம் 2200 பேர் சிறந்த தொழில் முனைவோர்களாக உள்ளனர். பட்டயப் படிப்புகளின் மூலம் 3330 பேர் பயனடைந்துள்ளனர். வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பில் சான்றிதழ் பெற்ற 4000க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் உரிமம் பெற்று உரம், விதை, பூச்சி மருந்து போன்ற வேளாண் இடுபொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர்." என்றார்.

மேலும் "இந்த ஆண்டு மேலும் நான்கு புதிய பட்டய படிப்புகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, இணைய வழியில் கற்க விரும்புபவர்கள் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற படிப்புகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் என அனைவரும் வயது வரம்பின்றி சேர்ந்து படிக்கலாம். கல்வி கட்டணத்தை பொருத்தவரை சான்றிதழ் படிப்புகளுக்கு 2500 ரூபாய், இணைய வழியில் கல்வி கற்க 3000 ரூபாய், ஓராண்டு காலப் பட்டய படிப்புகளுக்கு 20,000 ரூபாய், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பிற்கு 25,000 ரூபாய் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும்"இங்கிருந்து செல்லும் மாணவர்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் "அக்ரி பிசினஸ் டைரக்ட்ரேட்" மூலம் உதவி பெற்று தொழில் முனைவோர் ஆகலாம்." என்றும் கூறினார்.

தற்போதைய பருவ காலம் குறித்த கேள்விக்கு, "டிசம்பர் மாத காலகட்டத்தில் மட்டுமே பனிப்பொழிவு ஏற்படும், தற்போது ஏற்படுவது பனி அல்ல வெறும் சாரல் மட்டுமே!. தற்போது தென்மேற்கு பருவ காலத்தில் இருக்கிறோம், இந்த முறை சராசரி மழை பொழிவை பெறுவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது." என்றார்.

நிலத்தடி நீர் குறித்த கேள்விக்கு, "விவசாயிகள் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு வரும் நிலத்தடி நீரை ஆய்வு செய்து அதில் உள்ள தீமைகள் மற்றும் நன்மைகளை எடுத்துரைக்கிறோம். தற்போது இந்திய அரசுடன் சேர்ந்து நிலத்தடி நீர் குறித்த ஆய்வுகளை தொடங்கியுள்ளோம். மேலும் மழை நீரை அந்தந்த இடத்திலேயே சேமிக்கும் செயல்முறைகள் குறித்த தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அளித்து வருகிறகிறோம்."

என்று பதிலளித்தார்.

விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவின் தேவைகள் குறித்த கேள்விக்கு, "மண்ணின் ஈரப்பதத்தை வைத்து நீர் பாசனத்தை ஒழுங்குபடுத்துதல், களைகள் மீது மட்டும் களைக்கொல்லியை தெளித்தல், அறுவடை செய்தல் போன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.‌

சிறுதானிய உற்பத்தி குறித்து கேள்விக்கு, "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் "சிறுதானிய மகத்துவ மையம்" மூலம் அதிகப்படியாக சாகுபடி செய்யும் வகையில் சிறுதானிய பயிர்களை கொண்டு வந்துள்ளோம். சிறுதானியங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்" என்று பதிலளித்தார்.

மேலும் "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் வரக்கூடிய அனைத்து கல்லூரிகளிலும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகள் நடத்தப்படும் எனவே இதில் கல்வி கற்க விரும்புபவர்கள் தங்கள் அருகாமையிலேயே கற்றுக் கொள்ளலாம்." என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...