காவல்துறை அதிகாரி போல் நடித்து பணம் பறித்த மூவர் கைது: கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

கோவையில் காவல்துறை அதிகாரி போல் நடித்து மூத்த குடிமகனிடம் ரூ.67 லட்சம் பறித்த மூவரை மத்திய பிரதேசத்தில் கைது செய்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை ராம்நகர் பேரநாயுடு லேஅவுட்டைச் சேர்ந்த ஜார்ஜ் (75) என்ற மூத்த குடிமகனிடம் காவல்துறை அதிகாரிகள் என நடித்து ரூ.67 லட்சம் மோசடி செய்த வழக்கில் மூன்று பேரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி, ஜார்ஜை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை மும்பை பாந்தரா காவல் நிலைய அதிகாரி வினய்குமார் சவுத்ரி எனக் கூறி, ஜார்ஜின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு மோசடி நபர் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும், இந்த வழக்கில் ஜார்ஜை கைது செய்யப் போவதாகவும் மிரட்டினார். மறுநாள், மற்றொரு நபர் உயரதிகாரி என்று கூறி, கைதிலிருந்து தப்பிக்க உடனடியாக பணம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த மிரட்டலின் காரணமாக, ஜார்ஜ் ரூ.67 லட்சத்தை அந்நபர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். பின்னர் மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், மேலும் ரூ.10 லட்சம் அனுப்ப முயன்றபோது, வங்கி அதிகாரிகளின் உதவியால் இது ஒரு மோசடி என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜார்ஜ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் சர்மா (23), முகுல் சந்தல் (24), அனில் ஜாதவ் ஆகியோர் என தெரியவந்தது.

இதையடுத்து, கோவை போலீசார் மத்திய பிரதேசம் சென்று, உள்ளூர் போலீசாரின் உதவியுடன் மூவரையும் கடந்த ஜூலை 4-ம் தேதி கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். இவர்களிடமிருந்து லேப்டாப், செல்போன்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில், இந்த மூவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்களின் பெயரில் 700-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளையும், 100-க்கும் மேற்பட்ட யுபிஐடிக்களையும் பயன்படுத்தி இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2.25 கோடி பணப்பரிமாற்றம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தூரில் ஆன்லைன் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகளில் ஈடுபடுவதற்கான பயிற்சிகளைப் பெற்று, பொதுமக்களை போலீசார் எனக்கூறி ஸ்கைப், வீடியோ அழைப்புகள் மூலம் அழைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...