தமிழகம் முழுவதும் 1500 சவரன் நகை கொள்ளையடித்த கும்பலின் தலைவன் கோவையில் கைது

கோவையில், தமிழகம் முழுவதும் 68க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். 1500 சவரன் நகை மற்றும் 1.76 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகர தனிப்படை காவல்துறையினர் தமிழகம் முழுவதும் கொள்ளை உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் மூர்த்தியை கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கோவை மாநகரில் ரயில் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் தொடர்ந்து மர்ம கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கோவை மாநகர ஆணையரின் வழிகாட்டுதலின் பேரில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் வினோத் குமார் மற்றும் காட்டூர் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாத காலமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.



தீவிர விசாரணையின் அடிப்படையில் ராட்மேன் என்று அழைக்கப்படும் மூர்த்தி (36) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 68க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி அம்சராஜ் (26) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி கடந்த 2020 முதல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இரும்பு ராடின் உதவியோடு வீட்டை உடைக்கும் திறமை உடையவர் என்பதால் ராட்மேன் என்றும் அழைக்கப்படுகிறார். மூர்த்தி தலைமையிலான கொள்ளை கும்பலில் மொத்தம் ஏழு பேர் உள்ளனர். பெரும்பாலும் தனது உறவினர்களை வைத்தே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ரயில்வே தடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் நோட்டமிட்டு ஆட்கள் குறைவாக உள்ள வீடுகளில் மாறுவேடத்தில் புகுந்து அங்குள்ள ஆட்களைக் கட்டிப்போட்டுவிட்டு வெவ்வேறு மொழிகளில் பேசி கொள்ளையடிப்பது இவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது. சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், துடியலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

காவல்துறையினர், கோவையில் மட்டும் 63 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். மூர்த்தி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி நிலத்தில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். ராஜபாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள ஸ்பின்னிங் மில் மற்றும் ஒரு கோடி மதிப்புள்ள 53 சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், "மொத்தமாக உள்ள 68 வழக்குகளில் தோராயமாக 1500 சவரன் நகை, 1.76 கோடி வரையிலான ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை தனிப்படை தேடி வருகிறது" என்றார்.

எனவே இனி கோவை மாநகரில் குற்றங்கள் நடைபெறாது.‌ கோயம்புத்தூர் மாநகரத்தை பொருத்தவரை முன்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை வாரம் ஒரு முறை நேரடியாக சென்று, அவர்கள் தற்போது என்ன செய்து வருகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்." என்றும் அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...