சாய் கிஷோர் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் புதிய கேப்டன் - புதிய பொறுப்பில் வெற்றி பெற நம்பிக்கை

கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாய் கிஷோர் அறிவிக்கப்பட்டார். காயம் காரணமாக விஜய் சங்கர் விலகியதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



Coimbatore: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ், பயிற்சியாளர் முரளிதர், கிரிக்கெட் வீரர்கள் சாய் கிஷோர், நடராஜன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், சாய் கிஷோரை புதிய கேப்டனாக அறிவிப்பதாக அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் தெரிவித்தார்.



புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சாய் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எதிர்பாராத விதமாக விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால், கேப்டனாக அணியை வழிநடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நடராஜன், விஜய் சங்கர் உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களும் பிற திறமையான வீரர்களும் அணியில் இருக்கிறார்கள். எனவே இந்த சீசனில் அணியை முன்னேற்றி செல்ல ஆசைப்படுகிறோம்" என்று தெரிவித்தார்.

இரண்டு தோல்விகளுக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சாய் கிஷோரின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கேட்டபோது, "சவால்கள் இருந்தால் மட்டுமே உற்சாகம் இருக்கும். அணியினர் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளனர். இருப்பினும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. இதில் நான் தனியாக செய்வதற்கு ஒன்றுமில்லை, அணியில் உள்ள 11 பேரும் கேப்டனாகி விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும்" என்று பதிலளித்தார்.



கோவையில் விளையாடுவது குறித்து சாய் கிஷோர் கூறுகையில், "தமிழ்நாடு அணிக்காக விளையாடிய போதும் TNPL விளையாடிய போதும் கோவை எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டமான இடமாக இருந்துள்ளது. கோவையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். கோவையில் சிறந்த பிச் உள்ளது. ஆனால் பிச் நிலவரம் மாறும் தன்மையுடையதாக இருப்பினும் முன்பு இங்கு விளையாடிய அனுபவங்கள் உதவியாக இருக்கும்" என்றார்.

புள்ளி பட்டியல் குறித்து கேட்டபோது, "TNPL பொருத்தவரை ஏழு போட்டிகளில் முடிந்து விடும். எனவே புள்ளி பட்டியலில் முதல் அணிக்கும் இறுதி அணிக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. தொடர் வெற்றிகள் பெறும் பட்சத்தில் விரைவாக இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு சென்று விடலாம். எங்களது அணியின் ரன் ரேட் சரியவில்லை, எனவே ஓர் இரண்டு வெற்றிகளில் இரண்டாவது இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.

அணியின் பயிற்சியாளர் முரளிதர் கூறுகையில், "பிச் நிலவரம் எதுவாக இருந்தாலும், விரைவாக சூழலை உணர்ந்து அதற்கேற்றபடி விளையாடும் வகையில் பயிற்சி செய்துள்ளோம். வீரர்களின் 100% பங்களிப்பையே நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

இந்தியா அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டது குறித்து விஜய் சங்கர் கருத்து தெரிவிக்கையில், "கம்பீர் பயிற்சியாளராக இருந்த கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. தற்பொழுது இந்திய அணியும் உலக கோப்பையை வென்றுள்ளது. எனவே ஒரு ரசிகராக, கம்பீர் வழிகாட்டுதலின் கீழ் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...