கோவை 86வது வார்டு: குப்பை கிடங்கு, கழிவுநீர் பண்ணை அகற்றக் கோரி குடியிருப்பாளர்கள் போராட்டம்

கோவை 86வது வார்டில் குப்பை கிடங்கு, கழிவுநீர் பண்ணை மற்றும் தெருநாய் கருத்தடை மையம் அகற்றக் கோரி குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். அடிப்படை வசதிகள் கோரியும் மக்கள் குரல் எழுப்பினர்.


கோவை: கோவை மாநகராட்சியின் 86வது வார்டு குடியிருப்பாளர்கள் கழிவுநீர் பண்ணை, குப்பை கிடங்கு, தெருநாய் கருத்தடை மையம் உள்ளிட்டவற்றை அகற்றக் கோரியும், அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியும் உக்கடம் தெற்கு பகுதியில் உள்ள கழிவுநீர் பண்ணைக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



86வது வார்டைச் சேர்ந்த நாசர் கூறுகையில், "நோய் தொற்றை ஏற்படுத்தும் குப்பை கிடங்கு, கழிவு நீர் பண்ணை, நாய் கருத்தடை மையத்தை எங்கள் பகுதியில் இருந்து அகற்றக் கோரியும், சாலை மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியும், கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும் தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். அதிகாரிகள் தற்காலிக தீர்வுக்கு ஏற்பாடு செய்கிறார்களே தவிர, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதில்லை," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இங்குள்ள கழிவுநீர் பண்ணையில், நாளொன்றுக்கு 600 லாரிகளில் கழிவு நீர் கொட்டப்படுகிறது. இதனால் கடும் நோய் தொற்றுக்கு ஆளாகிறோம். எங்கள் வார்டில் மட்டும் தான் தெருவுக்குத் தெரு மருத்துவமனைகளும் மருந்தகங்களும் உள்ளன. குப்பை வாகனங்களில் மருத்துவக் கழிவுகளும் கொண்டுவரப்படுகிறது. சமீபத்தில் குப்பை வாகனம் ஒன்றிலிருந்து நோயாளி பயன்படுத்திய சிறுநீர்ப்பை சாலையில் விழுந்தது. மேலும் இந்த வாகனங்கள் செல்லும் போதெல்லாம் வாகனத்தில் இருந்து கழிவுநீர் வடிந்து கொண்டே செல்கிறது."

நாசர் தொடர்ந்து, "அதே சாலையை பயன்படுத்தும் எங்களுக்கும் எங்களது குழந்தைகளுக்கும் தோல் நோய்கள் ஏற்படுகிறது. பல போராட்டங்களுக்குப் பிறகு அகற்றப்பட்ட நாய் கருத்தடை மையம், தற்போது மீண்டும் இயங்கி வருகிறது. கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களை எங்கள் பகுதிகளுக்குள் விட்டுச் செல்கிறார்கள். எங்கள் எண்ணிக்கைக்கு சமமான அளவில் தெரு நாய்களும் எங்கள் பகுதியில் இருக்கின்றன," என்று குறிப்பிட்டார்.

"ஆர்எஸ் புரம், ரேஸ் கோர்ஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் செலுத்தும் அதே வரியை தான் நாங்களும் செலுத்துகிறோம். ஆனால் அவர்களுக்கு சொகுசு வாழ்க்கை எங்களுக்கு குப்பை கிடங்கு வாழ்க்கையா? அங்கு இருப்பது போன்ற அதே வாழ்க்கையை எங்களுக்கு அமைத்துக் கொடுங்கள், இல்லை என்றால் இங்கிருக்கும் குப்பைக் கிடங்கை ஆர்எஸ் புரத்திற்கு கொண்டு செல்லுங்கள்," என்று நாசர் கேட்டுக் கொண்டார்.

ஷைரா முஜிபுர் ரகுமான் கூறுகையில், "40 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அசுத்தமான குடிநீரை பருகும் சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்து சுகாதார மையத்தினர் ஆய்வு செய்வதுமில்லை. தெருநாய் தொல்லையாலும் பெரும் அவதிக்க ஆளாகிறோம்," என்றார்.



குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதி உலக வரைபடத்திலேயே இல்லாத அத்திப்பட்டி போல் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். காவல்துறையினரின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...