உடுமலை அருகே குடிநீர் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

உடுமலை அருகே கொண்டம்பட்டி ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் திருப்பூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சிக்கு திருமூர்த்தி அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வழங்கல் துறையிடம் பொதுமக்கள் பலமுறை நேரில் சென்று முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடுமலை-திருப்பூர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி, குடிமங்கலம் காவல் ஆய்வாளர் கீதா, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக இன்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

எனினும், முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடுமலை-திருப்பூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...